டிஜிட்டல் திண்ணை: டாஸ்மாக்கில் கேரளா மாடல்? அமைச்சர் நடத்திய அவசர ஆலோசனை!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  செந்தில் பாலாஜி குறித்த அப்டேட்டுகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை  டைப் செய்யத் தொடங்கியது.

 “ஏற்கனவே மதுவிலக்குத் துறையை கவனித்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை, அவரது வழக்கின் நிலை குறித்த தகவல்கள்தான்  அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் அவர் ஏற்கனவே  கவனித்து பெரும் புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான டாஸ்மாக்கின் நிலை  என்ன என்ற கேள்விக்கு அரசு வட்டாரங்களில் இருந்து பதில் கிடைத்திருக்கிறது.

செந்தில் பாலாஜி டாஸ்மாக் துறை அமைச்சராக இருந்தபோது அவர் மீது டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கடுமையான புகார்களை முன் வைத்தன. கரூர் கம்பெனியின் வசூல் பற்றி பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.

டாஸ்மாக் நிலை குறித்தும், டாஸ்மாக் தொழிலாளர்கள் எந்த தொழிலாளர் நல சட்டத்துக்குள்ளும் வராத அவல நிலையில் இருப்பது குறித்தும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் அவரிடம் இருந்து பதில் இல்லை.

இந்த நிலையில் டாஸ்மாக் துறையை தற்போது ஏற்றிருக்கும்  அமைச்சர் முத்துசாமி முதல்வரோடும், சபரீசனோடும் சில ஆலோசனைகளை செய்துள்ளார். வரும் தேர்தலில் டாஸ்மாக் விவகாரம்  திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று ஏற்கனவே இத்துறையின் செயலாளராக இருந்த பனீந்திர ரெட்டி போன்றவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளில் சிலரை அழைத்து டாஸ்மாக்கில் என்ன நடக்கிறது, இதை சரிசெய்ய என்ன  நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.

sign of drastic change in Tasmac

அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள், ‘பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பது இப்போதுதான் திடீரென நடப்பது போல பேசுகிறார்கள். இது ஏற்கனவே இருந்த ஆட்சியிலும் நடந்திருக்கிறது.

ஏன் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள் என்றால்… அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் எதற்கும் வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட எதையும் டாஸ்மாக் நிர்வாகம் வழங்குவதில்லை.

இதெல்லாம் கடை ஊழியர்களே கட்டிக் கொள்ள வேண்டும். மேலும் கடைகளுக்கு சரக்கு வந்து இறங்கும்போது சேதமடையும் பாட்டில்களுக்கான செலவும், போலீஸுக்கு மாதா மாதம் மாமூல் கொடுக்கும் செலவும் கடை ஊழியர்களே ஏற்க வேண்டும். அதனால்தான் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குகிறோம்.

மற்றபடி இந்த செலவுகளை  அரசே ஏற்றுக் கொண்டால் டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதலாக வாங்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் கரூர் கம்பெனியின் வசூல் இதையெல்லாம் தாண்டி வேறு லெவல். அதுதான் மக்களிடமும், டாஸ்மாக் ஊழியர்களிடமும் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் சலுகைகளைக் கொடுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அப்போது பேசிய அமைச்சர், ‘கேரளாவில் அரசு மதுபானக் கடைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை பார்வையிட்டு வர ஒரு குழுவை கேரளாவுக்கு அனுப்பியிருக்கோம். அவஙக சொல்றதையும் கேட்டுக் கொள்வோம். உங்க கருத்துகளையும் சிஎம்மிடம் பேசி ஒரு நல்ல முடிவெடுப்போம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்.

மேலும் நீண்ட மாதங்களாக நடைபெறாமல் இருந்த டாஸ்மாக் போர்டு மீட்டிங் இந்த வாரம் நடக்க இருக்கிறது. மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, துறைச்செயலாளர் அமுதா, நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன், வணிக வரித்துறை செயலாளர், மதுவிலக்குத் துறை ஆணையர், டாஸ்மாக் எம்டி ஆகியோர் அடங்கிய டாஸ்மாக் டைரக்டர்கள் போர்டு மீட்டிங் இந்த வாரம் அனேகமாக 27 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதிலும் டாஸ்மாக்கில் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

sign of drastic change in Tasmac

செந்தில்பாலாஜி நிர்வாகத்தால் ஏற்பட்ட கெட்ட பெயர் வரும் எம்பி தேர்தலில்  எதிரொலிக்கக் கூடும் என்று தொடர்ந்து முதல்வருக்கு எச்சரிக்கைகள் சென்றதை அடுத்துதான்… புதிய டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமியின் சில முன்னெடுப்புகள் தொடங்கியிருக்கின்றன. இது தொடருமா அல்லது பழையபடி வசூல் தொடருமா என்பதுதான் டாஸ்மாக் ஊழியர்கள் வட்டாரத்தில் இப்போது விவாதமாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

“கமல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம்” : ‘புராஜெக்ட் கே இயக்குநர்!

திருச்சியில் சோகம்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி!

+1
0
+1
3
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0