நாளை ஜூன் 7 ஆம் தேதி முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் இளைய மகன் திருமணம் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இந்த திருமண விழா அதிமுகவுக்குள் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் திருமண விழாவில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய மூவரும் சந்தித்துக் கொள்வார்களா என்ற கேள்விதான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.
எடப்பாடி பழனிசாமி தற்போது நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு போராட்டங்களைத் தாண்டி அதிமுகவின் பொதுச் செயலாளராக அமர்ந்துவிட்ட நிலையில்… அவருக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருக்கும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் வீடு தேடிச் சென்று சந்தித்தார். ஆனால் சசிகலாவை பன்னீர் செல்வம் இப்போதுவரை சந்திக்கவில்லை.
இதன்பின் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம் தனது இளைய மகன் திருமணத்தை முன்னிட்டு ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகிய மூவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை முன்னெடுத்தார்.
கடந்த மே 21 ஆம் தேதியன்று சென்னையில் டிடிவி தினகரனை வீடு தேடிச் சென்று திருமண அழைப்பிதழ் அளித்தார். தினகரனும் திருமணத்துக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.
ஜூன் 7 ஆம் தேதி வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் என்பதால், அந்தத் தேதியில் ஏற்கனவே தான் அறிவித்திருந்த அமமுக செயற்குழுக் கூட்டத்தையே ஜூன் 20 ஆம் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறார் தினகரன். இதன் மூலம் டிடிவி தஞ்சாவூர் திருமணத்துக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தினகரனுக்கு பத்திரிகை வைத்த பிறகு சில நாட்களிலேயே சசிகலாவை அவரது சென்னை தி.நகர் இல்லத்தில் சந்தித்தார் வைத்திலிங்கம். அப்போது சசிகலாவுக்கு கை மூட்டுப் பகுதியில் பிசகு ஏற்பட்டு கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அதனாலேயே வைத்திலிங்கம் சசிகலா சந்தித்த நிகழ்வில் புகைப்படம் எடுக்காமல் தவிர்க்கப்பட்டது. இதை மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
’கை கட்டு போட்டிருப்பதால் இதோடு தஞ்சாவூர் வரை வர முடியுமானு தெரியலை. அதுக்குள்ள கட்டு பிரிச்சிட்டா கண்டிப்பா நான் வர்றேன் என்று வைத்திலிங்கத்திடம் சொல்லியனுப்பினார் சசிகலா.
ஆனால் அதற்குப் பிறகான சில நாட்களில் வைத்திலிங்கத்திடம் சசிகலா இந்தத் திருமணத்துக்கு வர இயலுமா என்பது சந்தேகம்தான் என்பது தெரிவிக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு மாப்பிள்ளை-பெண்ணை தனியாக சந்திப்பதாகவும் சசிகலா தெரிவித்திருக்கிறார்.
சசிகலாவின் கையில் கட்டு போடப்பட்டிருப்பதுதான் அவர் திருமணத்துக்கு வராததற்கான காரணமா என்றால் அதுமட்டும் இல்லை என்கிறார்கள் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவர்கள். அவர்களிடம் பேசினோம்.
“தஞ்சையில் நடக்கும் திருமண விழாவில் ஓபிஎஸ், டிடிவி தினகரனோடு சசிகலாவும் வருவார் என்று ஆவலாக காத்திருக்கிறோம். ஆனால் அனேகமாக சசிகலா வரமாட்டார் என்றுதான் எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
சசிகலாவின் கையில் மூட்டுப் பிசகு மட்டுமல்ல… அவருக்கு வேறு சில வருத்தங்களும் இருக்கிறது. தஞ்சாவூர் திருமணம் பற்றி சசிகலா தனது சகோதரர் திவாகரனை அழைத்துப் பேசியிருக்கிறார்.
அப்போது திவாகரனிடம், ‘நான் ஜெயில்லேர்ந்து வெளிய வந்ததுலேர்ந்து அதிமுகவை ஒன்றாக சேர்ப்பேன் என்றுதான் சொல்லிக்கிட்டிருக்கேன்.
எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னுதான் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்புலயும் சொல்றேன். ஆனா இப்ப நான் தஞ்சாவூர் போய் வைத்திலிங்கம் வீட்டுத் திருமணத்துல கலந்துக்கிட்டா ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு மட்டுமே நான் ஆதரவா இருக்கேன்னு ஆயிடும்.
நான் அதிமுகவோட எல்லா அணிகளும் இணைந்து ஒற்றுமையா இருக்கணும்னுதான் விரும்பறேன். அதனாலதான் தினகரன் கட்சியில கூட ஆரம்பத்துல என் படத்தை போட்டவங்களை பிறகு போடவேண்டாம்னு சொல்லிட்டேன்.
எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் இவங்க எல்லாம் ஒண்ணாக இருக்கும் சூழல்லதான் நானும் அங்க இருக்க முடியும். அதனால இந்த கல்யாணத்துக்கு நான் வரமுடியாது. அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒண்ணாக்கி நான் சாகறதுக்குள்ள சாதிச்சுடுவேன்’ என்று திவாகரனிடம் சொல்லியனுப்பி இருக்கிறார் சசிகலா” என்கிறார்கள்.
அதனால் இந்தத் திருமணத்தில் சசிகலாவின் வாழ்த்து வருமே தவிர சசிகலா வருவது சந்தேகம்தான் என்கிறார்கள் டெல்டா வட்டாரங்களில்.
–வேந்தன்