கால்நடை மருந்து: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!

அரசியல்

திமுக ஆட்சியில் கால்நடைகளுக்கும் மருந்து தட்டுப்பாடு உள்ளதாகவும் உடனடியாக நோய்த் தடுப்பூசிகளை வாங்கி கால்நடைகளைக் காக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 26) அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மீன்வளத் துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என்று உண்மைக்குப் புறம்பாக பல கட்டுக்கதைகளை அறிக்கையாக அவிழ்த்து விட்டுள்ளதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படக்கூடாது எனும் கொள்கையுடன் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு கால்நடைகளின் உடல்நலம் பேணுதலில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகத்தில் சுமார் 95 இலட்சம் மாட்டினங்கள் உள்ளன. தேசிய கோமாரி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தேவைப்படும் கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அனைத்து மாட்டினங்களுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோமாரி நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் சுமார் 90 இலட்சம் மாட்டினங்களுக்கு முதல் சுற்று தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்கு ஒன்றிய அரசிடமிருந்து கடந்த செப்டம்பர் 2020-ல் பெறப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகளைக் கூட பெறாமல் கோட்டை விட்டதுதான் கடந்த கால அதிமுக ஆட்சி.

ஆனால் ஆட்சிப்பொறுப்பற்ற தமிழக முதல்வர் உடன் ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து நேரடியாகவும், கடிதங்கள் மூலமும், அழுத்தம் கொடுத்ததன் விளைவாகச் செப்டம்பர் 2021-முதல் ஜூன் 2022 வரை நான்கு தவணைகளாக 87 இலட்சம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு- கால்நடைகளுக்குத் தடுப்பூசித் திட்டம் திறமையாக நடத்தப்பட்டது கழக ஆட்சியில்தான் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த வருடம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பூசி பணிகளுக்கும் முன்கூட்டியே- கடந்த ஜூன்-2022, ஜூலை-2022, ஆகஸ்ட்-2022 ஆகிய மாதங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மூலமாகவும், செப்டம்பர்- 2022-ல் தலைமைச் செயலர் மூலமாகவும் ஒன்றிய அரசுக்கு கடிதம் வாயிலாக அழுத்தம் கொடுக்கப்பட்டு- அந்த 90 இலட்சம் தடுப்பூசிகளையும் டிசம்பர் 2022-க்குள் வழங்கி விடுவதாக ஒன்றிய அரசு நவம்பர் 24 அன்று உறுதியளித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கோமாரி நோயின் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அவசர தேவைகளுக்கு என சுமார் ஐந்து இலட்சம் கோமாரி நோய் தடுப்பு மருந்துகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக- பருவமழை காலத்தில் ஏற்படும் நோய்த்தாக்கத்தை தடுக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

medicine Scarcity anitha rathakrishnan press release for eps report

சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் திரித்து அறிக்கை வெளியிடும் முன்பு உண்மை நிலையைச் சிறிதளவாவது அறிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் என்ற நோயின் தாக்கம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் சுமார் 70,000 மாட்டினங்களுக்கு மேல் உயிர்ச் சேதம் ஏற்படுத்திய இந்த நோய்க்கு இந்திய அளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்- ஒன்றிய அரசு மற்றும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் ஆட்டம்மை நோய் தடுப்பூசியைத் தோல் கழலை நோய்க்குப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தனர்.

அதன் அடிப்படையில் 20 இலட்சம் டோஸ் ஆட்டம்மை நோய் தடுப்பு மருந்து தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு நோய் பாதித்த பகுதிகளில் தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாலும், தமிழக அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் இந்த நோயின் தாக்கம் அடியோடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதும்- ஒன்றிய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை உண்மை எதிர்க்கட்சி தலைவருக்குத் தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் வருடந்தோறும் கால்நடைகளுக்கான விழிப்புணர்வு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் அறிக்கையில் கதை அளந்திருக்கிறார்.

அப்போது நடத்தப்பட்டது வெறும் 5500 முகாம்கள் மட்டுமே. ஆனால் தமிழக முதல்வர் வழிகாட்டுதலுடன் இத்துறையின் மூலமாக கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கழக ஆட்சியில் ஒரு ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் 7760 முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதில் கூட கடந்த ஆட்சியை விட அதிக அக்கறை காட்டுவது கழக ஆட்சிதான் என்பதை மூடி மறைக்க இப்படி அபாண்டமாக அறிக்கை விடுகிறார் எதிர்க்கட்சி தலைவர் என்றே தோன்றுகிறது.

தமிழக முதல்வர் அவர்களின் தலைமையிலான அரசு மனிதர்களுக்கு இணையாகக் கால்நடைகளுக்கும் உயர்தர சேவை வழங்குவதில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் துறையின் தேவைக்கேற்ப தமிழ்நாடு மருத்துவப்பணிக் கழகத்தின் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் வழங்கப்படுகின்றன. அனைத்து கால்நடை நிலையங்களிலும் மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன.

மருந்துகள் தட்டுப்பாடு என்ற நிலையே ஏற்படவில்லை. தமிழகத்தில் கால்நடை நோய்களான அடைப்பான், தொண்டை அடைப்பான், கோழிக்கழிச்சல் ஆட்டம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக இலவசமாகப் போடப்படுகிறது.

சட்டமன்றத்திற்கு வரும் எதிர்கட்சித் தலைவர் இதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பொய் அறிக்கை வெளியிடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள் நியமன பட்டியல்!

பெண்களின் ஆடை : பாபா ராம்தேவின் புதிய சர்ச்சை!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *