ஊடகம் உண்மையைக் காட்டுவதில்லை: ராகுல் வேதனை!

அரசியல்

”ஊடகம் உண்மைப் பக்கத்தைக் காட்டுவதில்லை” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸைப் பலப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் இன்று (டிசம்பர் 24) டெல்லி வந்தடைந்தது.

இந்த நடைப்பயணத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

அதுபோல், ராகுல் குடும்பத்தினரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். இரண்டாவது முறையாக தன் அன்னை இந்த யாத்திரையில் கலந்துகொண்ட அன்பு குறித்து, ராகுல் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

ராகுல் யாத்திரையில் கமல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டது குறித்து ஏற்கெனவே நாம் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”நாட்டில் தற்போது இருப்பது நரேந்திர மோடி அரசு அல்ல. இது அம்பானி – அதானி அரசு. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு அல்ல. இந்தியாவில், மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்கு இதுவரை மத்திய அரசு தீர்வு காணவில்லை.

நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே இந்து – முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது. பட்டம் படித்த இளைஞர்கள் பலர் இன்று பகோடா விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை. நாடு முழுவதும் வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது.

வெறுப்புச் சந்தையில் நான் அன்பின் கடையை திறக்கிறேன். நான் மேற்கொண்ட இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் எங்களோடு நாய்கூட வந்தது. ஆனால், ஒருவரும் நாயை கொல்லவில்லை.

பசு, எருது, பன்றி என பல்வேறு விலங்குகள் வந்தன. இந்த யாத்திரை இந்தியாவின் யாத்திரையாக இருக்கிறது. இங்கே வெறுப்புக்கு இடமே இல்லை. வன்முறைக்கு இடமே இல்லை. நான் 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளேன்.

ஆனால், எந்த வெறுப்பையும் பார்க்கவில்லை. நான் தொலைக்காட்சியை ஆன் செய்தால் வன்முறையை மட்டுமே பார்க்கிறேன். ஊடகம் ஒரு நண்பன். ஆனால், பின்னால் இருந்து உத்தரவுகள் வருவதால் அவை நாங்கள் பார்த்த உண்மை பக்கத்தை காட்டுவதில்லை” என்றார், ராகுல்.

ஜெ.பிரகாஷ்

ரூ.100 கோடியில் சிலை: பெரியார் தடியால் அடித்திருப்பார் – சீமான்

திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான்: முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *