விமான கண்காட்சியை முன்னிட்டு 5 நாட்கள் இறைச்சி விற்க தடை!

Published On:

| By christopher

பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற இருப்பதை முன்னிட்டு, எலஹங்கா விமானப்படை தளத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்கு 5 நாட்கள் இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு 14வது “ஏரோ இந்தியா 2023” கண்காட்சி நடைபெற உள்ளது.

இதனால், விமானநிலையத்தைச் சுற்றி 10 கி.மீ., தூரத்திற்கு இறைச்சி கடைகளை மூடவேண்டும் என்று பெங்களூரு உள்ளாட்சி அமைப்பு(பிபிஎம்பி) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிபிஎம்பி வெளியிட்டுள்ள உத்தரவு அறிக்கையில், “வரும் ஜன. 30 முதல் பிப். 20 வரை எலஹங்கா விமானப்படை தளத்தையொட்டி 10 கிமீ சுற்றளவிற்கு அனைத்து இறைச்சி, கோழி, மீன் கடைகளை திறக்கவும், அசைவ உணவகங்கள்,

ரெஸ்டாரண்ட்களின் அசைவ உணவு பரிமாறவும் விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது என்று பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள், அசைவ உணவுவிடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த உத்தரவினை மீறுவர்கள் மீது பிபிஎம்பி சட்டம் 2020, இந்திய விமானச்சட்டம் 1937 பிரிவு 91 ன் கீழ் தண்டனை வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், தடைக்கான காரணத்தையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ”பொது இடங்களில் சிதறிக்கிடக்கும் அசைவ உணவுகள் மற்றும் இறைச்சி துண்டுகள் பறவைகளை ஈர்க்கின்றன.

இது கண்காட்சியில் பங்கேற்கும் விமானங்கள் நடுவானில் பறக்கும்போது பறவைகள் மோதி விபத்திற்குள்ளாக கூடும். எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

புதிய திட்டத்துக்காக வேலூர் செல்லும் முதல்வர்!

டாஸ்மாக் விருது சர்ச்சை : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share