கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

அரசியல்

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேது மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் நலமாக இருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடித்துவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி மாடு முட்டி கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை இணையதளத்தில் பார்க்கின்றபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.

இந்தச் சம்பவத்தைக் கண்டு அருகில் உள்ளவர்கள் கற்களால் மாடுகளை விரட்ட முயற்சித்தும், சிறிது நேரத்திற்கு மாடு அந்தச் சிறுமியை தொடர்ந்து தாக்கியது பேரதிர்ச்சியை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பூரண குணமடைந்து விரைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை மாநகரத்தில் அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபத்தூர், பம்மல், புரசைவாக்கம், பெரம்பூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நாய்கள் அங்குமிங்கும் குறுக்கே செல்வதன் காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சிலர் நாய்க் கடிக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வாகனமில்லாமல் இரவு நேரங்களில் நடந்து செல்வது என்பது அபாயகரமானதாக உள்ளது.

இதேபோன்று, பெரும்பாலான தெருக்களில் மாடுகள் கும்பல் கும்பலாக சென்று, மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை கவிழ்த்து அதில் உள்ள உணவுப் பொருட்களை தின்பதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்படுவதோடு, அந்த இடமே சுகாதாரமற்ற சூழ்நிலையாக மாறிவிடுகிறது.

சில இடங்களில் மாடுகள் மிரண்டு ஓடுவதன் காரணமாக மக்கள் பதற்றமடைந்து அதனால் கீழே விழக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. மாடுகள் மக்களை முட்டும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.

இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும். வேளாண் துறையில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள் என்றாலும், அந்தக் கால்நடைகளால் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுமேயானால், கால்நடைகளை முறைப்படுத்தவும், தெருக்களில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அரசின் தலையாய கடமையாகும்.

கிராமப் புறங்களில் மாடுகள் மேய்வதற்கு இட வசதிகள் உள்ளன. இப்படிப்பட்ட இட வசதி நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் இல்லை என்ற நிலையில் நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இடவசதி இல்லாமல், தெருக்களை மட்டுமே நம்பி மாடுகளை வளர்ப்போரை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி, மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லையெனில், மனிதர்கள் படுகாயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகிவிடும்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

லட்சுமி மேனன் உடன் திருமணமா? – விஷால் விளக்கம்!

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: அன்புமணி கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *