“திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்”: மதிமுக தீர்மானம்!

Published On:

| By Selvam

mdmk meeting vaiko resolution

mdmk meeting vaiko resolution

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இன்னும் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (மார்ச் 7) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் இயங்கி வரும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல் தீர்மானத்தில், “அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் பாஜக தலைமையிலான அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றியே ஆக வேண்டும். இந்த நோக்கத்தோடு தேசிய மற்றும் மாநில கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா கூட்டணி’ 18-ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இயங்கி வரும் ‘இந்தியா கூட்டணி’ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு 29.02.2024 அன்று ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.

தனது அயராத போராட்டத்தாலும், நீதிமன்றத்தில் நீதிக்காக நடத்திய பெரும் போராட்டத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் செய்த வைகோவுக்கு மதிமுக நிர்வாகக் குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது” என்று இரண்டாவது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது தீர்மானமாக, “செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003இல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு  மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது.  இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான (attaining criticality) எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 4ஆம் தேதி துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத மத்திய பாஜக அரசு நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே மத்திய பாஜக அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மதிமுக நிர்வாகக் குழு வலியுறுத்துகிறது” என்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், “புதுச்சேரி முத்தயால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 9 வயது மகளான ஐந்தாம் வகுப்பு மாணவி அங்குள்ள கொடியவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலையும் செய்யப்பட்டுள்ளார்.

அம்மாநில அரசு விரைந்து செயல்பட்டு பாலியல் வன்முறையிலும், படுகொலையிலும் ஈடுபட்ட கொடியவர்களை கடுமையாக தண்டிக்குமாறும் புதுவை வாழ் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் மதிமுக நிர்வாகக் குழு கேட்டுக்கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Heatwave: இந்த மாவட்டங்கள்ல ‘சூரியன்’ ஓவர்டைம் வேலை செய்யுதாம்!

புதுச்சேரி சிறுமியின் உடல் நல்லடக்கம்!

mdmk meeting vaiko resolution