மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

அரசியல்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, மதிமுக சார்பில், மாநாடு நடத்துவது வழக்கம். அதன்படி முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளான இன்று மதுரையில் மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை,
பாஜகவை அகற்ற வேண்டும்
இந்தியாவை பாரதம் என்றே அழைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூப்பாடு போடுவதின் உண்மை நோக்கம் என்ன?

பரதன் என்ற அரசர் சந்திர குல வம்சத்தைச் சேர்ந்தவன். முதல் சக்கரவர்த்தியாக இந்து தேசத்தை ஆண்டவன் அவன் தானாம்.
தன்னுடைய ராஜ்யத்தில் இந்து தேசத்தின் சகலப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குடையின் கீழ் ஆண்டான் என்று, மகாபாரதத்தில் ஒரு பாடல் வருகிறது.

எனவேதான் இந்த தேசம் பாரத தேசம் பரத கண்டம் அவன் வழி வந்தவர்கள் பாரதியர்கள் என்று புராணங்களின் அடிப்படையிலேயே இவர்கள் வரலாற்றைத் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பாரத தேசம் என்று இவர்கள் சொல்வதும் பாரதியம் என்று இவர்கள் சொல்வதும் இது இந்துக்களினுடைய நாடு என்பதைத்தான் வெளிப்படையாக பிரகடனப் படுத்திக் கொண்டு இருக்கிறது.

இந்தியாவை இந்தியா என்று அவர்கள் ஒப்புக் கொள்ளாத நோக்கத்தை ஆர்.எஸ்.எஸ். குரு கோல்வாக்கர் விளக்கியிருக்கிறார். இந்தியா என்றால் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கும், பாரதம் என்று சொன்னால் இந்துக்களை மட்டும் தான் குறிக்கும் என்று கூறுகிறார்.

பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கான முயற்சி என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் அத்தியாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆர். எஸ். எஸ், இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே மோடி அரசு இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு முனைந்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவது ஒன்றுதான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தீர்வு என மதிமுக மாநாடு பிரகடனம் செய்கிறது.

சட்டங்கள் பெயர் மாற்றத்துக்கு கண்டனம்
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்ற சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா என்ற பெயரையே மாற்றத் துடிக்கும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், இதற்கு முன்னோட்டமாக சட்டங்களில் உள்ள “இந்திய” என்ற பெயரை “பாரதீய” என்று மாற்ற முனைந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இயங்கி வரும் மோடி அரசு செத்துப் போன சமஸ்கிருத மொழிக்கும் ,இந்தி மொழிக்கும் செல்வாக்குத் தேட முயற்சிப்பதும்,நகரங்கள்,ஊர்கள் பெயர்களை மாற்றி வருவதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

அதன் உச்சமாக சட்டங்களின் பெயரையும், ஏன் நாட்டின் பெயரையும் மாற்றிட துணிந்து விட்டது. ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு

குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை கொண்டு வந்த பாஜக அரசு, அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது.

2014 இல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017 ஆம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது.
2018 ஆம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதியன்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறி, பா.ஜ.க செயல் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று பச்சைக் கொடி காட்டினார்.
தலைமைத் தேர்தல் ஆணையாளர் கூறியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையைச் செயல்படுத்த தொடக்கமாக, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும் என்று மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

நூலகங்களை கைப்பற்றுவதை கைவிடவேண்டும்
நூலகச் சட்டம் தமிழகத்தில் முதன் முதலாக 1948 இல் உருவாக்கப் பட்டது. பின்னர் பல மாநிலங்களில் உருவாக்கப்பட்டன.
நூலகங்கள் மாநில உரிமைகள் பட்டியலில் உள்ளது. ஒன்றிய அரசு பலமுறை சட்ட முன்வரைவு செய்து, இந்திய நூலகச் சட்டத்தை பொதுப்பட்டியலில் சேர்க்க முயற்சித்து வருகிறது.

1976 ஆம் ஆண்டு கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு எடுத்த பொழுது கூட அத்துறையின் கீழிருந்த நூலகத்தை மாநிலப்பட்டியலிலேயே விட்டுவிட்டது.
தற்பொழுது ஒன்றிய அரசு நூலகத்துறையைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றுகிறது. சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவர் உலகப் புகழ்பெற்றவர்.
இவர் தான் இந்தியாவில் நூலகச் சட்டத்திற்கு காரணமானவர். இந்திய அரசு இவரை சட்டம் இயற்றப் பணித்தது.

தமிழகம் நூலகச்சட்டத்தின் முன்னோடியாக உள்ளது. அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்களுடன் நூலகம் ஏற்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 4640 நூலகங்களில் 1915 நூலகங்கள் கிராமங்களில் உள்ளன.
தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நூலகம் உண்டு. அதனை இணைத்துப் பார்த்தால் தமிழக நூலக எண்ணிக்கை அதிகம்.
மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் விதமாக ஒன்றிய பாஜக அரசு, நூலகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முனைந்து இருப்பதை கைவிட வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

விஸ்வகர்ம யோஜனா திட்டம் -திரும்பப் பெற வேண்டும்

15.08.2023 அன்று சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை உயர்த்தி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, “செப்டம்பர் 17 ஆம் தேதி விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும்” என அறிவித்தார். இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கருவிகள் மூலமும், கைகள் மூலமும் பொருட்களை செய்பவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக 18 தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், காலணி தைப்பவர், கொத்தனார், கூடை பாய், துடைப்பம் நெய்பவர், பொம்மைகளை செய்பவர்கள், முடி திருத்துபவர்கள், பூமாலைகளை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர்கள், கவசம் தயாரிப்பவர்கள், இரும்புக் கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் போன்றவர்கள் இதில் அடங்குவர்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு பயிற்சி நாள்களில் தினமும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும். தொழிற்கருவிகளை பெற ரூ.15,000 வரை நிதியுதவியும் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் இத்திட்டம் மூலம் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். இத்திட்டத்தில் குறைந்த வட்டியில் கடனும் வழங்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் ஒன்றிய பாஜக அரசு, 18 வகையான குலத் தொழில்களை பட்டியலிட்டு, வர்ணாசிரம முறையை நிலைநாட்ட முனைந்திருப்பதற்கு மதிமுக மாநாடு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

நீட் விலக்கு மசோதா

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்து இட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கொக்கரித்த நாளில், குரோம்பேட்டை மாணவரும், அவருடைய தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நிகழ்ந்தது.
கல்வித்துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து ஏக போக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒன்றிய அரசின் போக்கினால் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிர்களை இழக்க நேரிடுமோ என்ற கவலை ஏற்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறியும், மாநில அரசின் அதிகாரத்தை பறித்தும் எதேச்சாதிகாரமாக துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு இம்மாநாடு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மதுரை எய்ம்ஸ்
பிரதமர் மோடி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது 45 மாதங்களில் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் எனக் கூறிய நிலையில் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’க்கு ஒதுக்கிய 224.24 ஏக்கர் இடம் வெறும் பொட்டல்காடாக காட்சி அளிக்கிறது. இதற்கு முழுப் பொறுப்பை ஒன்றிய பாஜக அரசுதான் ஏற்க வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மதுரைக்கு குடிநீர்

மதுரை மாநகராட்சிக்கு ஒரு நாளைக்கு 371 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்களில் இருந்து 192 எம்எல்டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. மதுரை மாநகராட்சி 72 வார்டுகளிலிருந்து இருந்து 100 வார்டுகளாக அதிகரித்ததோடு, 20 லட்சம் மக்கள் வசிப்பதால் இந்தக் குடிநீர் போதுமானதாக இல்லை.

அதனால், மதுரை மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்க அம்ரூத்3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 பகுதிகளாக இந்த குடிநீர் திட்டப்பணிகள் நடக்கின்றன.

முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை அமைத்து, அணையில் இருந்து அந்த தடுப்பணையில் தண்ணீரை சேமித்து, அதனை அங்கிருந்து பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வந்து மக்கள் குடிக்க உகந்த குடிநீராக சுத்திகரித்து பின் மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக லோயர் கேம்ப் பகுதியில் இருந்து பண்ணைப்பட்டி வரை 96 கி.மீ., நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீருக்கான பிரதானக் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பண்ணைப்பட்டியில் இந்த தண்ணீரை சுத்திகரிக்க 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான பிரதான குழாய் பதிக்கப்படுகிறது. இந்த தண்ணீரை, மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 38 பிரமாண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்தக் குடிநீர் திட்டம் தொடங்கும்போது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்டத்தை முடித்து, மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தாமதமானது. தற்போது வரை 60 சதவீதம் வரையே பணிகள் நிறைவுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.

திருப்பூர் பனியன் தொழில்
இந்தியாவும் வங்க தேச நாட்டுடன் போட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் திருப்பூர் பனியன் தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் இருந்து, பருத்தி இறக்குமதி செய்ய வசதியாக உருவான இந்த ஒப்பந்தம், இன்று உள்நாட்டு சந்தைகளைப் பதம் பார்ப்பதாக, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள், நாடு முழுதும் விற்பனைக்கு செல்கின்றன. சில ஆண்டுகளாக, வங்கதேச நிறுவனங்கள், முழுமையான வரி சலுகையில், இந்தியாவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்கின்றன. உள்நாட்டு சந்தைகளில் கொரோனாவுக்கு பின், வங்கதேசஆடை விற்பனை அதிகரித்துள்ளது.
வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, வங்கதேசத்தில் இருந்து ஆடைகள் இறக்குமதியாவது அதிகரித்துள்ளது.

இந்தியாவை காட்டிலும், கிலோவுக்கு, 50 ரூபாய் துணி விலை குறைவு என்பதால், ஆடையை குறைந்த விலைக்கு உள்நாட்டுசந்தையில் விற்கின்றனர். இதனால், பின்னலாடை தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, வங்க தேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து , திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

தமிழகத்தில் கன்னட மொழி பேசுகிறவர்களில் குரும்பர் சமூகத்தினரும் அடங்குவர். தற்போது மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குரும்பர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரத்தில், குரும்பரில் ஒரு பிரிவினர் குருமன்ஸ் என பழங்குடி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் குரும்பா, குரும்பர், குருமன் என அழைக்கப்படும் சமூகத்தினர் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தினர் என்பதால் அனைவரையும் குருமன்ஸ் என்ற பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.
இதனை வலியுறுத்தி மத்திய பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டாவுக்கு பொதுச் செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை கடந்த 2022, டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளார். அவர் தமது கடிதத்தில், குரும்பர்கள் ஒரே இனம் என பல்வேறு ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டு, முடிவுகளும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன,

அதனடிப்படையில் அரசமைப்பு பிரிவு 342இல் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு
இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 2022 பிப்ரவரி மாதம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியது.
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களும், கொடுமைகளும் இன்னும் தொடர்கின்றன.
தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதும் தொடர் கதையாகி விட்டது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் இனவெறி வன்முறைகளுக்கு முடிவு கட்டாமல், பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஏற்படாது.
எனவே, இலங்கைக்கு நிபந்தனை இல்லாமல் இந்திய அரசு கடன் வழங்கவோ, ஆதரவளிப்பதோ கூடவே கூடாது.
வடக்கு கிழக்கிலிருந்து ராணுவத்தை வெளியேற்றுதல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல், ஈழத் தமிழர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல், மீனவர் சிக்கலுக்குத் தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக இலங்கையிடம் வாக்குறுதிகளைப் பெற்று அதனடிப்படையில் மட்டும் தான் இலங்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்று மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழத்தமிழர்களின் இறையாண்மையை உறுதி செய்ய தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதை பொதுச்செயலாளர் வைகோ முதன்முதலில் 2011 ஜூன் 1 ஆம் நாள், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நடந்த மாநாட்டில் முன்வைத்தார். உலகத் தமிழினம் இணைந்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. மன்றம் மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும் என இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இந்தியா கூட்டணி வெற்றி
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய தலைமை தணிக்கை குழு,சிஏஜி அறிக்கையின் மூலம் ஏழு திட்டங்களில் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இதனால்தான் பிரதமர்,உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சனாதனத்திற்கு ஆதரவாக பேசி நாட்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
2024 இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் ,மோடி தலைமையிலான பாஜக அரசை ஆட்சி பீடத்திலிருந்து தூக்கி எறிய எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்
பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும்பத்தைச் சார்ந்தது. இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், மலேசியா முதலிய நாடுகளில் தென்னை மரத்தில் லாபம் இல்லையென்று தென்னையை அழித்துவிட்டு, செம்பனை என்ற குட்டை பாமாயில் மரங்களை வளர்க்கிறார்கள்.
பாமாயில் ஏற்றுமதியில் மலேசியாவும், இறக்குமதியில் இந்தியாவும் முதலிடம் வகிக்கின்றன.
பாமாயில் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த சமையல் எண்ணெய் மலிவு விலையில் கிடைப்பதால், தேங்காய்விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்க பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும். அல்லது இந்த எண்ணெய் இறக்குமதிக்கு 300 சதவீதம் வரி விதிக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் கொடுக்கும் பாமாயில் எண்ணெயை ரத்து செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க ஆவண செய்ய வேண்டும் என ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசை மதிமுக மாநாடு வலியுறுத்துகிறது.
இவ்வாறு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பிரியா

மகளிர் உரிமை தொகை: தலைவர்கள் கருத்து!

விஏஓ கொலை : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *