வைஃபை ஆன் செய்ததும் மதிமுகவின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தின் தீர்மான நகல், புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மதிமுக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டத்தை நேற்று மார்ச் 6 ஆம் தேதி பகல் அறிவித்தார் வைகோ. திமுக கூட்டணியில் ஒரு சீட்டுதான், அதுவும் உதயசூரியன் தான் என்று திமுக உறுதியாக சொல்லிவிட்ட நிலையில்… வைகோவின் இந்த நிர்வாகக் குழு அறிவிப்பு திமுகவிலேயே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. வைகோவுக்கு எடப்பாடி தரப்பில் இருந்தும் முன்கூட்டியே தூது விடப்பட்டிருந்த நிலையில், வைகோ தேர்தலுக்கு முந்தையை திடீர் முடிவுகளை மீண்டும் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் மதிமுக மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சென்னைக்குக் கிளம்பினர். அவர்களில் கணிசமானோரிடம் திமுக மாசெக்கள் தொடர்புகொண்டு, ‘பாத்துக்கங்க… உங்க தலைவர் ஏதாச்சும் டென்ஷன்ல முடிவெடுத்துடப் போறாரு…’ என்று விசாரித்துள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 11.30 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது. முதலில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் பேசினார். கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் இருக்கும் அவர், ‘நாங்கள் கூட்டணி பேச போனபோது ஒரு இடம்தான் என்றும் அதுவும் உதயசூரியன் தான் என்றும் திமுகவில் சொல்லிவிட்டார்கள். நாங்கள் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை, எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று தலைவரின் சொல்படி அங்கே தெரிவித்துவிட்டு வந்தோம். தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதற்கு நாம் கட்டுப்படுவோம்’ என்று கூறினார்.
அதன் பின் பேசிய முதன்மைச் செயலாளர் துரை வைகோ, ‘தலைவர் உடல் நலனை பாதுகாப்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். தலைவர் என்ன சொல்கிறாரோ அதற்கு கட்டுப்படுவோம்’ என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பொருளாளர் செந்திலபதிபன் உரையாற்றினார். அவரது உரையும் திராவிடம் சார்ந்ததாக இருந்தது.
நிறைவுரையாற்றிய வைகோ, கலைஞருடன் தனக்கு இருந்த நெருக்கத்தை எல்லாம் உருக்கமாக விவரித்தார். ‘கலைஞர் எங்கே சென்றாலும் அவரது காரில் அவருடன் பயணிக்கும் உரிமையைப் பெற்றிருந்தேன். என் 60 வருட பொதுவாழ்க்கையில் 29 வருடங்கள் திமுகவிலே பயணித்துவிட்டேன். அடுத்த 31 வருடங்களை மதிமுகவை உருவாக்கி நடத்தி வருகிறேன். நமக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்தத் தேர்தலை நாம் கடந்தாக வேண்டும்.
திமுகவிலே ஒரு சீட்டுதான் என்று சொல்லியிருக்கிறார்கள். நாமோ ஒரு சீட், ஒரு ராஜ்யசபா என்று கேட்டோம். தனிச் சின்னம்தான் என்று உறுதியாக நிற்கிறோம். தம்பி, துரையிடம் பேசியிருக்கிறார்கள் போல… பம்பரம் சின்னத்தில் நாம் நிற்போம் அல்லது தனிச் சின்னத்தில் நிற்போம். பம்பரம் சின்னத்துக்காக இன்று கூட வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நாம் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் ஆகிவிடுவோம். நம்மால் சனாதனம் ஒரு துளி கூட பலம் பெற்றுவிடக் கூடாது. திராவிடத்துக்கு நம்மால் பாதிப்பு வந்துவிடக் கூடாது’ என்று ஒரு சீட்டுக்கு ஒப்புக் கொண்டதை வைகோ தெரிவித்தார்.
நேற்று முதலே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரும் வைகோவோடு பேசியிருக்கிறார்கள். ‘தேர்தலுக்கு முன்போ பின்போ அதிமுகவும் பாஜகவும் எப்போது வேண்டுமானாலும் சேர வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் வேறு எதுவும் முடிவெடுத்துவிடாதீர்கள் அண்ணே’ என்று வைகோவிடம் பேசியிருக்கிறார்கள்.
நேற்று நிர்வாகக் குழு அறிவிப்புக்குப் பின் அமைச்சர் சேகர்பாபுவும் கூட துரைவைகோவிடம் பேசியதாகக் கேள்விப்பட்டோம் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்களே சொல்கிறார்கள் .
உதயசூரியன் என்ற வார்த்தையை வைகோ உச்சரிக்கவில்லை. அதேநேரம் பம்பரம் அல்லது தனிச் சின்னம் என்ற வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உச்சரித்திருக்கிறார். எனவே சின்னம் தொடர்பாக திமுகவிடம் இருந்து துரைவைகோவுக்கு சாதகமான பதில் வந்திருக்கலாம். அதன் அடிப்படையில்தான் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது, மேலும் அந்த ஒரு சீட்டில் நிற்கப் போவது யார் என்ற தகவலையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் மதிமுக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி : விஜய் புதிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!