சுருட்டிய பணம் எங்கே? மிரட்டிய மாஜி அமைச்சர் குடும்பத்தினர் மீது வழக்கு!

அரசியல்

அதிமுக முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.சி. சம்பத் குடும்பத்தை மையமாக வைத்து பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. 

முன்னாள்  அமைச்சரும்  அதிமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம். சி. சம்பத்திடம் கடந்த ஆட்சியில் உதவியாளராக இருந்து வந்தார் குமார்.

சம்பத்தின் சொந்த பெரியப்பா ராமசந்திரனின் மகளை திருமணம் செய்தவர்தான் குமார். அதாவது மாஜி அமைச்சருக்கு மருமகன் முறை.

கடந்த ஆட்சியில் இந்த குமார்  அமைச்சராக இருந்த எம். சி. சம்பத் பெயரைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தார், வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று பலர் சம்பத்திடமே சென்று புகார் கூறினார்கள். குமாரிடம் பேசி வாங்கி தருவதாக சமரசம் செய்து அனுப்பினார் சம்பத்.

அதேநேரம் சம்பத் பெயரை சொல்லி பல கோடி பணத்தை பலரிடமும் வாங்கி தனது மாமனார் மூலமாக அவரது கிராமமான மேல்குமார மங்கலத்தில் வட்டிக்கு விட்டிருக்கிறார் குமார் என்று சம்பத் குடும்பத்தினரும் அவர் மீது கோபமாக இருந்தார்கள்.

இந்த நிலையில்  மாஜி அமைச்சர் சம்பத் சகோதரர்கள் தங்கமணி, சம்பந்தம், மற்றும் பால்கார் பழனி, கள்ளிப்பட்டி இராஜேந்திரன், கொக்குபாளையம் சிவா ஆகியோர் ராமசந்திரன் வீட்டுக்கு சென்றனர்.

’எங்கள் குடும்பத்தினர் பெயரைப் பயன்படுத்தி பலரிடம் பணம் ஏமாற்றி வாங்கி ஊர் மக்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வர்றீங்களா? எங்கள் அண்ணன் பணத்தையும் ஏமாற்றிவிட்டு எங்களுக்கே துரோகம் செய்யறீங்களா? எங்கடா குமார் அவனை அழைத்து வா’ என்று கேட்டனர். பிறகு ராமச்சந்திரனை அந்த  ஊர் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர் .

இந்த தகவல் போலீஸுக்கு தெரிந்ததும் மேலிடத்திற்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர்.

இதையடுத்து போலீஸார் முன்னாள் அமைச்சர் சம்பத் குடும்பத்தினரால் மிரட்டப்பட்டதாக சொல்லப்படும் ராமச்சந்திரனை பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  டிஎஸ்பி சபியுல்லாவும் ஸ்பாட்டுக்கு  சென்று விசாரணை நடத்தினார்.

அடுத்த அரை மணி நேரத்தில் டிஐஜி பாண்டியன், எஸ் பி சக்தி கணேசன், நான்கு டிஎஸ்பி மற்றும் போலீஸார் பண்ருட்டியில் குவிக்கப்பட்டனர்.

ராமச்சந்திரனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்து மாஜி அமைச்சர் சம்பத் சகோதரர் தங்கமணி, கள்ளிப்பட்டு ராஜேந்திரன், மேல்குமாரமங்கலம் பால்கார் பழனி மற்றும் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

(குற்ற எண் 2/2023 ) தகவல் தெரிந்த முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் இந்த விவகாரம் குறித்து கடலூர் மாவட்ட எஸ். பி. சக்திகணேசன் மற்றும் டிஐஜி பாண்டியனிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

எஸ். பி. யும் டி.ஐ.ஜி.யும் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என கை விரித்து விட்டனர். தற்போது எம் சி சம்பத்தின் உடன் பிறந்த தம்பி தங்கமணியை கைது செய்ய மாஜி அமைச்சரிடம் பேச்சு வார்த்தை செய்து வருகின்றனர் பண்ருட்டி போலீஸார்.

உதவியாளராக உடனிருந்து ஏமாற்றியவரைத் தட்டி கேட்டது குற்றமா என்கிறார் தங்கமணி.

அதிமுக மாசெ சம்பத்தின் தம்பியாக இருந்தாலும் இந்த தங்கமணி திமுகவைச் சார்ந்தவர். திமுகவில் போட்டியிட பலமுறை சீட் கேட்டவர், இவரது மருமகன் டாக்டர் ராஜசேகர் 2021 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

இந்த பின்னணியில் முன்னாள் அதிமுக அமைச்சரின் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இப்போதைய திமுக அதிகாரப் புள்ளிகளே காவல்துறையினருக்கு போன் செய்து வருகிறார்கள். இதனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் மாஜி அமைச்சரின் குடும்பத்தினரின் மீது போலீஸ் இன்னும் கைது நடவடிக்கையை தொடங்கவில்லை,

வணங்காமுடி

பொங்கல் தொகையை வங்கி மூலம் செலுத்த முடியுமா?

புகைப்பட கலைஞர் திடீர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “சுருட்டிய பணம் எங்கே? மிரட்டிய மாஜி அமைச்சர் குடும்பத்தினர் மீது வழக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *