பிள்ளையார் சதுர்த்தி எனப்படும் விநாயகர் சதுர்த்தி இந்து பெருமக்களால் இன்று (ஆகஸ்டு 31) பக்தியோடு கொண்டாடப்படுகிறது.
களிமண்ணால் செய்த பிள்ளையார் சிற்பங்களில் அருகம்புல் செருகி பழங்கள், கொழுக்கட்டை படைத்து வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
ஒரு பக்கம் பக்திப் பரவசத்தோடு இந்த சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும், இன்னொரு பக்கம் இந்த நிகழ்வை அரசியல் நோக்கி மடை மாற்ற சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
வழக்கமாக திமுக தலைமையும், திமுக ஆட்சியில் இருக்கும்போது முதல்வரும் இதுபோன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாவிட்டாலும், திமுகவைச் சேர்ந்த அடுத்தடுத்த பிரமுகர்கள் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலுவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மயிலாப்பூர் என்னும் ஆன்மீக தொகுதியில் திமுக ஜெயித்து வந்த நிலையில் மயிலாப்பூரை அனைத்து மத ஆன்மீக சுற்றுலா தலமாக மாற்ற முயற்சித்து வருகிறார் வேலு.
மயிலை வேலு அரசியல்வாதி என்பதைத் தாண்டி சிறந்த கருத்துப் படம் வரைபவர். பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு நாளும் தனது சிந்தனையை கருத்துப் படமாக வரைந்து தனது சமூக தளப் பக்கங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களிலும் பகிர்ந்து வருகிறார் வேலு.
அந்த வகையில் இன்று (ஆகஸ்டு 31) விநாயகர் சதுர்த்தி அன்று காலையும் ஒரு கருத்துப் படத்தை வரைந்து வெளியிட்டிருந்தார்.
அதில், ‘தும்பிக்கை மீது நம்பிக்கை வைத்துள்ள உள்ளங்களுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அருகே ஒரு யானை நிற்பது போல படம் வரைந்திருந்தார்.
இத்தோடு விடவில்லை மயிலை வேலு. அந்த யானையின் நெற்றியில் வழக்கம்போல பட்டையோ பொட்டோ வைக்காமல் உதயசூரியன் படத்தை வரைந்திருக்கிறார். இதுதான் சமூக தளங்களில் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.
என்ன சார் இது என்று கேட்டால், “யானை என்று சொன்னாலே உங்களுக்கு பிள்ளையார்தான் ஞாபகம் வரும். இங்கே இந்த யானை திமுகதான்” என்று சிரிக்கிறார் மயிலை வேலு.
பிள்ளையார்களில் திராவிடப் பிள்ளையார், திமுக பிள்ளையாரும் வந்துவிட்டது.
-**வேந்தன்**
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்?: முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!