நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று (மார்ச் 26) இரவு மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மயிலாடுதுறை தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ராகுல் காந்தியின் வலது கரமான ப்ரவீன் சக்கரவர்த்தியா, ஹசீனாவா என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் முன்னாள் எம்பி மணி சங்கரய்யரும் களத்தில் குதித்து எனக்கே சீட் என்றார்.
இப்படிப்பட்ட இழுபறிக்கு இடையே மார்ச் 26 ஆம் தேதி இரவு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான சுதா ராமகிருஷ்ணன் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தொகுதியில் வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால் அதே சமூகத்தைச் சேர்ந்த சுதா களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிறுத்தும் மூன்றாவது பெண் வேட்பாளர் ஆகிறார் சுதா. ஏற்கனவே கரூர் ஜோதிமணி, விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு தாரகை ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்க மயிலாடுதுறைக்கு சுதா அறிவிக்கப்பட்டார்.
அவசர அவசரமாக நேற்று இரவே புறப்பட்டு மயிலாடுதுறை சென்ற சுதா, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதியான மார்ச் 27 ஆம் தேதியன்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சுதா யார், இவரது பின்னணி என்ன?
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சாதாரண குடும்பத்து பெண் தான் சுதா. சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய சுதாவுக்கு சமூக, அரசியல் விவகாரங்களில் இயல்பாகவே ஆர்வம் உண்டு.
2010-11ல் வழக்கறிஞராக இருந்தபடியே காங்கிரஸ் கட்சி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். இளைஞர் காங்கிரஸில் தீவிரமாக செயலாற்றினார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளராக அறியப்பட்டார் சுதா. அரசியல் பின்னணி இருந்த நிலையில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களின் ஆதரவோடு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சுதா.
இளங்கோவன் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த காலகட்டத்தில் 2014 ஆம் ஆண்டு, இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மாநில செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார் சுதா.
அந்தத் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இப்போது தமாகாவில் இருக்கும் யுவராஜா வெற்றி பெற்றார். மாநில செயலாளர்களில் ஒருவராக சுதாவும் வெற்றி பெற்றார்.
இளைஞர் காங்கிரசின் அமைப்புத் தேர்தல்கள் வெவ்வேறு மாநிலங்களில் நடந்தபோது அங்கே சென்று பார்வையாளாராக பணியாற்றினார் சுதா. இந்த பயணங்களின்போது வெளி மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தேசிய அளவிலான முக்கிய தலைவர்களின் அறிமுகத்தையும் தொடர்பையும் பெற்றார் சுதா.
தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளராக இவர் செயலாற்றிய விதமும் இவருக்கு டெல்லி வரை நற்பெயரை ஈட்டிக் கொடுத்தது.
2020ல் கொரோனா தீவிரம் குறையாத நிலையில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக சுதா நியமிக்கப்பட்டார். இப்பதவியில் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே கொரோனா அச்சம் இருந்த நிலையில் கூட மாவட்டம் மாவட்டமாக சென்று மகளிர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்டினார் சுதா.
சுதாவின் இந்த பணிகள் மகளிர் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகளிடத்திலும், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளிடத்திலும் அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளரான பெங்களூரூவைச் சேர்ந்த சவுமியா ரெட்டிக்கு நெருக்கமானார் சுதா. மேலும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல் வாசினிக்கின் பாராட்டையும் பெற்றார்.
இந்த பின்னணியில்தான் இந்தியா முழுதும் காங்கிரசுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய, ராகுல் காந்தி நடத்திய, ‘பாரத் ஜோடா யாத்திரை’ 2022 செப்டம்பர் 7 ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் தொடங்கியது.
குமரி தொடங்கி காஷ்மீரில் முடிவதாக திட்டமிடப்பட்ட இந்த யாத்திரையில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான காங்கிரஸார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அதேநேரம் ராகுல் காந்தியோடு அந்த 150 நாட்களும் நடப்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
தமது முந்தைய கட்சிப் பணிகளால் வழக்கறிஞர் சுதாவும் அந்த 150 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றார்.
12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்லும் 3,570-கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 6 மாதங்கள் நடந்த இந்த நடைப் பயணத்தில் ராகுலோடு 150 பேர் முழுமையாக கலந்துகொள்ள திட்டமிட்டனர்.
ஆனால் அந்த 150 பேர்களில் கூட 26 பேர் உடல் நலக் குறைவால் இடையிடையே பயணத்தில் இருந்து விலகினர். ஆனால் கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரை ராகுல் காந்தியோடு முழுமையாக நடந்தார் வழக்கறிஞர் சுதா. தமிழகத்தில் இருந்து மூவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இடையிடையே இருவர் பயணத்தைத் தொடர முடியாமல் போனது. ஆனால் குமரி முதல் காஷ்மீர் வரை முழுமையாக நடந்தார் சுதா.
தினம் தினம் ராகுல் காந்தியோடு பழகி, அவரோடு உரையாடினார். தமிழ்நாட்டின் சமூக, அரசியல் சூழல், காங்கிரஸின் நிலை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது சுதாவிடம் ராகுல் கேட்டறிந்தார்.
மழை, குளிர், வெயில் என கடுமையான காலகட்டங்களில் தன்னோடு உறுதியாக பயணித்த வழக்கறிஞர் சுதாவை ராகுல் காந்தி வெகுவாக பாராட்டினார். அதன் பிறகு எங்கே சுதாவை பார்த்தாலும், பாரத் ஜோடோ யாத்திரையை பற்றி நினைவு கூர்ந்து பாராட்டுவார் ராகுல் காந்தி.
எந்த அளவுக்கென்றால் ராகுல் காந்தி மேற்கொண்ட “இந்திய ஒற்றுமை நடைபயணம்” நிறைவுற்ற போது வெளியிடப்பட்ட “இந்தியாவின் ஆன்மா மீட்டெடுப்பு ” என்ற புத்தகத்தில் ராகுல் உட்பட இருபது முக்கிய தலைவர்களின் பயண அனுபவங்கள் தொகுக்கப்பட்டன. அந்த இருபது பேரில் சுதாவின் பயண அனுபவங்களும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இப்படி ஒரு பெண்ணாக நீதி மன்றப் படிக்கட்டுகளில் நியாயத்துக்காக நடந்து… பின்னர், அரசியல் ஈடுபாடு கொண்டு காங்கிரஸில் பயணித்து அதுவும் குறிப்பாக ராகுல் காந்தியோடு இந்தியா முழுதும் பயணித்து இன்று மயிலாடுதுறையின் மக்களவை வேட்பாளராகியிருக்கிறார் சுதா.
மயிலாடுதுறையில் சிங்கப் பெண்ணாக களமாடுகிறார் சுதா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன், பிரியா
தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?
பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!