பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (ஆகஸ்ட் 29) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, ஜூலை 25ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் முர்முவை, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 17ம் தேதி டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதுபோல், ஆகஸ்ட் 23ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று (ஆகஸ்ட் 29) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சந்திப்புக்குப் பிறகு தனது ட்விட்டர் பதிவில் மாயாவதி, “இன்று ராஷ்டிரபதி பவனில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஜி அவர்களுடன் மிக அருமையான சந்திப்பு நடைபெற்றது.
பழங்குடி (எஸ்டி) சமுதாயத்தைச் சேர்ந்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனதற்கு அவர் முறைப்படி வாழ்த்துக்களை தெரிவித்தேன். சமுதாயத்தையும், நாட்டையும் அவர்கள் ஒளிரச் செய்ய வேண்டும். இதுவே என் விருப்பம்.
சொல்லப்போனால், பகுஜன் சமாஜ் மற்றும் பிற கட்சிகளும் கட்சி அரசியலுக்கு அப்பால் தங்கள் ஆதரவை முர்முவுக்கு அளித்து, அவர் பெரும் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வைத்தனர்.
ஆனால் இன்னும் கொஞ்சம் சரியான மற்றும் அர்த்தமுள்ள முயற்சி எடுத்திருந்தால், அவர் இந்த தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக வெற்றி பெற்று புதிய வரலாறை படைத்திருக்கலாம்.
அவர் மீது நாடு மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் மாயாவதி.
ஜெ.பிரகாஷ்