ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழைய இருக்கும் நிலையில், இதை அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்களான அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் புறக்கணிக்க உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லியில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
டெல்லியில் நடந்த யாத்திரையில் திமுக எம்.பி.கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுபோன்று ராகுல் காந்தியின் யாத்திரையில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அதிக தொகுதிகளைக் கொண்ட, பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை ஜனவரி 3ஆம் தேதி நுழைகிறது.
இந்த யாத்திரையில் கலந்துகொள்ள வருமாறு உத்தரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரிய லோக் தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோருக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் அகிலேஷ் யாதவ் இந்த யாத்திரையில் பங்கேற்கமாட்டார். ஆனால் கட்சி சார்பில் தலைவர் யாரையாவது யாத்திரையில் கலந்துகொள்ள அகிலேஷ் அனுப்புவாரா என தெரியவில்லை என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி இதுகுறித்து கூறுகையில், “தங்கள் கட்சி ராகுலின் யாத்திரையை ஆதரிக்கிறது. அதேசமயத்தில் அரசியல் கூட்டணி பற்றிய யூகங்களைத் தூண்டி குழப்ப விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது சமாஜ்வாதி கட்சி.
அந்த தேர்தலில் 114 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 இடத்தில் மட்டுமே வென்றது. 311 இடங்களில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை அடைந்தது.
அதுவே 2022ல் உத்தரப் பிரதேசத்தில் தனித்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 255 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக 111 இடங்களில் வெற்றி அடைந்து சட்டமன்ற எதிர்க்கட்சியாக உள்ளது. 2022 உபி தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்தசூழலில் தான் கூட்டணி குறித்த குழப்பத்தை தவிர்க்கவே சமாஜ்வாதி கட்சி ராகுலின் யாத்திரையை புறக்கணிக்கவுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
அதுபோன்று சமாஜ்வாதி கட்சிக்குக் காங்கிரஸ் அழைப்பு விடுத்ததும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. காரணம், 2024 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அகிலேஷ் யாதவின் ஆதரவு தேவைப்படும் என்பதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது..
சமாஜ்வாதி கட்சி போன்று ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியும் யாத்திரையை புறக்கணிக்க உள்ளது. அக்கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி கூறுகையில், “ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், காங்கிரஸ் பேரணியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் சாகர் கூறுகையில், “இவ்விவகாரத்தை அரசியல் கண்ணாடி அணிந்து பார்க்கக் கூடாது. நாங்கள் சித்தாந்த ரீதியாக யாத்திரையை ஆதரிக்கிறோம். ஏற்கனவே ராஜஸ்தானில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி குறித்த எச்சரிக்கை காரணமாகவே அகிலேஷ் யாதவ் இந்த யாத்திரையை புறக்கணிக்கும் நிலையில், மாயாவதியும் ராகுலின் யாத்திரையை புறக்கணித்துள்ளார்.
ஒருகாலத்தில் ஆட்சியில் இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தற்போது மாநிலத்தில் தனது செல்வாக்கை இழந்துள்ளது. 2022 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “காங்கிரஸை ஆதரிப்பது பாஜக எதிர்ப்பு வாக்குகளில் பிளவையே ஏற்படுத்தும்” என்று கூறியிருந்தார். அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ராகுல் காந்தி, மாயாவதியை கடுமையாக விமர்சித்திருந்தார். “மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முன் வந்தது. மாயாவதியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவும் முன் வந்தோம். ஆனால் அவர் எங்கள் பேச்சை கேட்கவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை, பெகாசஸ் ஆகியவற்றுக்கு பயந்துவிட்டார். பாஜக வெற்றி பெற தெளிவான பாதையை அமைத்து கொடுத்துவிட்டார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு, “பிரதமரை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிக்கும் கட்சி நாங்கள் அல்ல” என்று விமர்சித்தார் மாயாவதி. அதோடு, காங்கிரஸ் கட்சி தனக்குச் சாதகமான காலங்களில் தலித் அல்லாதவர்களை முன்னிறுத்தியும், மோசமான காலங்களில் தலித் மக்களை முன்னிறுத்தியும் அரசியல் செய்வதாக விமர்சித்திருந்தார். இவ்வாறு தனது அறிக்கைகள் மூலம் காங்கிரஸுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மாயாவதி யாத்திரையை புறக்கணித்ததில் ஆச்சரியமில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பிரியா
குடிதண்ணீரில் மனித கழிவு: அதிர்ச்சியில் பட்டியலின மக்கள்
கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!