அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நல உதவியை 6000 ரூபாயிலிருந்து 18,000 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூட்டத்தில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் 1982-இன் கீழான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதி உதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்புப் பயிற்சி ஆகியவற்றுக்கு ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி , அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நலத்திட்ட உதவிகளை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கியும்,
வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நல உதவியை 6000 ரூபாயிலிருந்து 18,000 ஆக உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டமான,
“சேவை செயலி”யை புதிதாக அறிமுகப்படுத்தவும், வாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கவும் ஒப்புதல் அளித்து அமைச்சர் கணேசன் உத்தரவிட்டார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் துறை தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு ஆலோசனைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதும் குறிப்பிடதக்கது.
இந்த கூட்டத்தில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், தொழிலாளர் நலத்துறை செயலாளர் முகமது நசிமுதீன், துறை ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கலை.ரா
ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன்: யாருக்கு ஆதரவு – சசிகலா
துணிவு படத்தை பார்த்து கொள்ளை: வங்கி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் வாக்குமூலம்!