மஸ்தான் கொலை வழக்கு: 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முன்னாள் எம்.பி.யும், திமுக சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவருமான மஸ்தான், கடந்த 22-ம் தேதி திருவல்லிக்கேணியில் இருந்து உறவினர் இம்ரான் என்பவருடன் காரில் சென்றபோது கூடுவாஞ்சேரி அருகே நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் மஸ்தானின் முகம், கழுத்து, கை போன்ற இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. அத்துடன் காரில், ரத்தமும், கீறல்களும் இருந்துள்ளது.
மஸ்தான் உடல் வைக்கப்பட்டிருந்தபோது இம்ரான் சிரித்தபடி, எந்தவித வருத்தமும் இல்லாமல் இருந்ததும், அவரது நடவடிக்கையும் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மஸ்தான் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மஸ்தான் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
அதில் இம்ரான் கூலிப்படையினர் உதவியுடன் மஸ்தானை கொன்றது தெரிய வந்தது. அதிகாலையில் மஸ்தானை எழுப்பி அழைத்துச் சென்று காரிலேயே வைத்து 5 பேரும் மஸ்தானின் வாயையும், மூக்கையும் பொத்தி கொன்றிருக்கின்றனர்.
மஸ்தானுடன் பயணித்த இம்ரான் அவருடைய சகோதரரின் மருமகன் ஆவார். இம்ரானுக்கும், மஸ்தானுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இம்ரான் கொலை செய்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இம்ரான், லோகேஷ், நசீர், சுல்தான் அகமது, தவ்பீக் உள்ளிட்ட 5 பேரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கலை.ரா
நாற்காலிக்காக சண்டையிட்டுக் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்!
பெற்றோரிடமே கடத்தல் நாடகம்: போலீசிடம் சிக்கிய இளம்பெண்!