மஸ்தான், செந்தில் பாலாஜி – அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் : அண்ணாமலை காட்டம்!

Published On:

| By Kavi

“சாராய விற்பனைக்கு துணை செல்லும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகிய இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த இரு நாட்களில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். செங்கல்பட்டில் 7 பேரும், விழுப்புரத்தில் 13 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

இவ்விவகாரத்தில் சாராயம் விற்பனை செய்த மரக்காணத்தைச் சேர்ந்த முத்துவை போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில் ஹோல்சேல் வியாபாரியான மரூர் ராஜாவை கை காண்பித்திருக்கிறார் முத்து.

“திண்டிவனம் திமுக 20ஆவது வார்டு கவுன்சிலர் ரம்யா கணவர் ராஜா கிட்டேர்ந்துதான் சரக்கு வாங்குறோம். அவர் ஃபவர்புல் ஆள். அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர். கடந்த ஏப்ரல் மாதம் சாராயம் சப்ளை விவகாரத்தில் ராஜாவை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் அவர் மீது குண்டாஸ் போடவில்லை.

அமைச்சர் மஸ்தானின் அழுத்தத்தால், கைதானாலும் ராஜா மீது இன்னமும் குண்டாஸ் போட முடியவில்லை. சிறையில் இருந்து கொண்டே தனது ஆட்கள் மூலம் சாராயம் சப்ளை செய்கிறார்” என்று முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கள்ளச்சாராய குற்றவாளியுடன் அமைச்சர் மஸ்தான்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

Senthil Balaji deprived of the ministerial post

மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்து இன்று (மே 16_ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்திற்கு 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. 30க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயத்திற்குப் பலியானவர்களை, அவர்கள் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் காவல்துறையே அடக்கம் செய்த அவலமும் நிகழ்ந்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, தமிழகம் முழுவதும் 1558 கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து, பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

இத்தனை கள்ளச்சாராய வியாபாரிகளின் விவரங்கள் தெரிந்திருந்தும், கள்ளச்சாராயம் விற்பவர்கள் யார், விற்பனை எங்கே நடக்கிறது என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்காமல் இத்தனை நாட்கள் அனுமதித்துவிட்டு, தற்போது கண்துடைப்புக்காக கைது நடவடிக்கைகள் மேற்கொள்வது வெட்கக்கேடு.

யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “மரக்காணம் துயரச் சம்பவத்தில், மரூர் ராஜா எனும் சாராய வியாபாரியின் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது. திமுகவைச் சேர்ந்த இவர், திண்டிவனம் 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரம்யா என்பவரின் கணவர்.

சாராய விற்பனையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. 2018ம் ஆண்டிலேயே சாராய விற்பனை தொடர்பாக இவர்மேல் வழக்கு இருந்து வருகிறது. அதுபோக, பல்வேறு குற்ற வழக்குகளும் இவர் மேல் இருக்கின்றன.

இந்த மரூர் ராஜா அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையைத் தொடர்ந்து வந்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம், காரில் சாராயம் கடத்திய வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எனினும், அமைச்சரின் நெருக்கத்தால், சிறையில் இருந்தபடியே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரியவருகிறது.

சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சித்தால் உடனே குண்டாஸ் நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும், மரூர் ராஜா மேல் இதுவரை குண்டாஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? அமைச்சர் செஞ்சி மஸ்தானுடனான நெருக்கமா? ஒரு சாராய வியாபாரியை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்து கொண்டிருக்கிறாரா?

கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்துவது, மதுவிலக்குத் துறையின் முக்கிய பொறுப்பாகும். ஆனால், அந்த துறைக்குப் பொறுப்பான சாராய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தெரியாமல் இத்தனை அதிகமான அளவில் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்குமா என்பதும் கேள்விக்குறி.

கள்ளச் சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று காலை வருவதாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் சம்பவ இடத்துக்கே வரவில்லை.

ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் வழக்குப்பதிவு செய்ய, தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஆணையிட்டிருக்கிறது. செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவரும், கள்ளச் சாராய விற்பனை குறித்து அறிந்திருந்தும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அல்லது தங்கள், அமைச்சர் பதவிக்கான பொறுப்புகளிலிருந்து தவறியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே, டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச்சாராய விற்பனைக்கும் துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவும் பாஜக தயங்காது என்று எச்சரிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

பிரியா

பிச்சைக்காரன் 2’ ஸ்னீக் பீக் வெளியானது!

ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share