ஆளுநருக்கு எதிராக மக்கள்திரள் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

அரசியல்

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிப் பல லட்சங்களை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்று (மார்ச் 4) தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ”அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். நான் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து விட்டேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் பிரியா விடை பெறுகிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்.

என்னைப் போல் பல பேர் குடும்பத்தை அனாதையாக விட்டுச் செல்கிறார்கள். இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை மெரினாவில் அவ்வையார் சிலை பின்புறம் உள்ள கடற்கரையில் சுரேஷ் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஏற்கனவே தாம்பரத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 20 லட்சம் ரூபாயை இழந்த மருந்து வியாபாரி வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

’ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களைக் காப்பதற்காவது அதைத் தடை செய்யுங்கள்’ என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த எதார்த்தமும், வலியும் ஆளுநருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உரைக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியோடு அண்ணாமலை டீல்?  பாஜக நிர்வாகியை ‘தூக்கிய’ எடப்பாடி

WPL: மிரட்டிய ஷபாலி, பந்தாடிய டாரா.. சரணடைந்த பெங்களூரு

Mass protest against the governor
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.