அரசியலிலிருந்து விலகுவதாக நமது எம்.ஜி.ஆர். மற்றும் நமது அம்மா நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ஆசிரியராக பணியாற்றியவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அந்த நாளிதழ், சசிகலா தரப்பினர் கைக்கு சென்றதையடுத்து, அதிலிருந்து விலகினார்.
அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், கட்சிக்கான அதிகாரப்பூர்வ நாளிதழாக (பிப்ரவரி 24 ) 2018 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ’நமது அம்மா’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழ் தொடங்கப்பட்டது முதல் அதன் ஆசிரியராக இருந்து வந்தவர் மருது அழகுராஜ்.
இந்த நிலையில், அதிமுக உட்கட்சி பிரச்சினையால், பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றொரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் தேதி ’நமது அம்மா‘ நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்தும் மருது அழகுராஜ் விலகினார்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 21) அரசியலிலிருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில்,
”எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
இது காலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துக்களால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?