கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்வார் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது”ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்துள்ளது.
கனகராஜ் அண்ணன் தனபால் வாக்குமூலத்தை புகாராக ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். தனபாலின் குற்றச்சாட்டு மூலம் திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிச்சாமி என்பது என தெரிகிறது.
கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
கொடநாடு குற்றவாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட சேலம் இளங்கோவனை காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை. அதிமுக மாநாட்டில் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி ஏன் தீர்மானம் போடவில்லை?
கொடநாடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அதிமுகவை பதுங்கு குழியாக பயன்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அவரை மத்திய அரசும், மாநில அரசும் பாதுகாக்கிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். கொடநாடு வழக்கு குறித்து நமது அம்மா நாளேட்டில் எழுத வேண்டாம் என்று சொன்னார் எடப்பாடி. இந்த வழக்கில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார்” என்று தெரிவித்தார்.