தொண்டர்களின் கருத்துக்கு மாறான தீர்ப்புகள் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டாலும் கட்சியின் தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் இன்று (ஏப்ரல் 20) உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறும்போது,
“நீதிமன்றங்கள் முதல் தேர்தல் ஆணையம் வரை மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டதிட்ட விதிகளையும் எடப்பாடி பழனிசாமியின் சதிகளையும் சரிவர உள்வாங்கி கொள்ளாமல் தவறான தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு தரக்கூடிய தண்டனையாக நான் பார்க்கிறேன்.
தொண்டர்களின் கருத்துக்கு மாறான தீர்ப்புகள் தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டாலும் கட்சியின் தலைமை யார் இருக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்.
மக்கள் மன்றம் தான் இறுதியானது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்று தான். நாங்கள் இதனை பின்னடைவாக கருதவில்லை. எடப்பாடியிடம் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் அது அவமான சின்னமாக மாறிவிடும். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் இருந்த இரட்டை இலை சின்னம் என்பது வேறு. எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும் இரட்டை இலை சின்னம் என்பது வேறு. எடப்பாடி ஒற்றை தலைமைக்கு உதவாத சொத்தை தலைமை. இதனை தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் முறியடித்து காட்டுவோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்