மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்கள் பொன்ராஜ், சேகர் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் வாழை.
இப்படத்தை பார்த்த தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, மிஷ்கின், வெற்றி மாறன், ராம், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி புகழ்ந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற வாழை திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சினிமா மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது வாழை. படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் மாரி செல்வராஜ் வீட்டிற்கு நேரில் சென்று அவரை பாராட்டினார். அதேபோல, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
இந்தநிலையில், வாழை படத்தை பார்த்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அரசியல் லாபங்களுக்காக தேவேந்திரகுல வேளாளர் மக்களின் போராட்ட உணர்வு இப்படத்தில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” அனுதாபங்கள் தேவையில்லை!
இந்திய சமுதாயம் மிகவும் பொல்லாத சமுதாயம். சாதி வெறுப்பை ஒவ்வொரு அணுவிலும் பொத்தி வைத்திருக்கக்கூடிய சமூகம். எளிய மக்களுக்கு ஏற்படும் சிறு சிறு துன்பங்களையும் துயரங்களையும் கண்டு கண்ணீர் சிந்தும் சமுதாயம் அல்ல. எனவே, இம்மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை படம் போட்டுக் காட்டி யாருடைய அனுதாபங்களையும், அதன் மூலம் வசதிகளையும் தேட முயலக் கூடாது.
1968 ஆம் ஆண்டு கீழவெண்மணியில் 43 ஆண்கள், பெண்களை தீயிட்டுக் கொளுத்திய போது தப்பித்துச் சென்ற குழந்தைகளைக் கூட பிடித்து வந்து நெருப்பிலே போட்டு எரித்ததை வேடிக்கை பார்த்த சமுதாயம் தான் இது. 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மண்ணுரிமைக்கான போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தாமிரபரணியின் கீழ் கரையிலிருந்து நீந்தி மேல் கரைக்குச் சென்றவர்களைக் கூட தப்பிக்க விடாமல் காலால் மிதித்தும், தடியால் தாக்கியும், கற்களைக் கொண்டு எறிந்தும் 17 தொழிலாளர்களின் உயிரை எடுத்த சமுதாயம் தான் இது.
எனவே இம்மக்களை உயிரோடு எரித்துக் கொல்வதையும், நீரிலே அமுக்கிக் கொல்வதையும் கூட தவறாகவோ பாவமாகவோ கருதாத சமூகமா? ”இரு வாழைத்தார்களைச் சுமந்து செல்லும் சிறார்கள் மீது இரக்கம் காட்டப் போகிறது?”
பண்டைய தமிழ் நாகரிகத்திற்கான உரிமையுடையவர்கள்!
இன்று தமிழகத்தில் பூர்வ குடி மக்கள் எய்தியிருக்கக்கூடிய சுதந்திரத்தைப் பெற எவ்வளவோ கண்ணீர் என்றோ வடிக்கப்பட்டு விட்டது. சிந்த வேண்டிய ரத்தங்களும் என்றோ சிந்தப்பட்டுவிட்டது. எஞ்சி இருக்கக்கூடிய அடக்கு முறைகளையும், ஆதிக்கத்தையும், சுரண்டலையும் மீண்டும் வெகுண்டெழும் போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் அதிகாரத்தை அடைவதன் மூலமாகவும் மட்டுமே அடைய முடியுமே தவிர, எவருடைய அனுதாபங்களையும் தேடி – கண்ணீரை வரவழைத்து அல்ல.
தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வாழும் தேவேந்திர குல வேளாளர்களே இன்றும் சிறு நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள். எந்தவொரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும் தன்னுடைய நிலத்திலும் உழவு செய்வான். அண்டை விவசாயி நிலத்திலும் உழவும் செய்வான். களை எடுக்கவும் செய்வான், நெல்லையும் அறுப்பான். வாழையும் சுமப்பான்.
அதுவே அடிமைத்தனமும் அல்ல. சுரண்டலின் மொத்த வெளிப்பாடும் அல்ல. புளியங்குளம் ’கூலிக்காரர்கள்’ என்ற அடையாளத்தை தாங்கியது அல்ல. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தோன்றிய ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முற்பட்ட ”இன்றைய புளியங்குளம், அன்றைய ஆதிச்சநல்லூர்” பண்டைய தமிழ் நாகரிகத்திற்கான உரிமையுடையவர்கள்.
தாமிரபரணியின் வரலாறு என்னவோ அதுதான் இத்தமிழ் மண்ணின் – தேவேந்திரகுல வேளாளர்கள் – தமிழர்களின் வரலாறு. நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்தது தான் இம்மக்களின் வரலாறு. அதைச் சுமந்து கொடுத்தது அல்ல இப்பூர்வீக குடிமக்களின் வரலாறு.
கோழைகளாக்க வேண்டாம்!
’வாழை’யைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை ”கோழையாக்குகின்ற” வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது.
தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலகட்டங்களில் வாழ்ந்து, இன்று திரைத்துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய ஒரு இயக்குநராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அதற்காகப் பாராட்டுகிறோம்.
அதே சமயத்தில் தனது இழந்த அடையாளத்தை – அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம். ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் ’கூலிக்காரர்களாகவே’ சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.எனினும், பாராட்ட நினைக்கிறேன், பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன், திட்டவும் முடியவில்லை.
”தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது. தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது” என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை ’வாழை’யை சொல்லி கூலிகளாக – கோழைகளாக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கூலி’ – யில் இணையும் சௌபின் சாஹிர்
அம்பானியின் கனிவான கவனத்திற்கு… அப்டேட் குமாரு