Dead line to Edappadi for alliance

பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில்  தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமைப்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த வகையில் தமிழ்நாட்டில் தனது பழைய தோழனான அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டுவர பாஜக பல்வேறு வகைகளிலும் முயற்சி எடுத்து வருகிறது.

பிப்ரவரி 27 ஆம் தேதி  பல்லடத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் எம்.ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர் நல்லாட்சி தந்தார்கள்” என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யின் கடுமையாக எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக இந்த கூட்டத்துக்கு அழைக்கவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும்  கூட அதிமுகவை எப்படியாவது மீண்டும் கூட்டணிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்ற பாஜகவின் முயற்சியையே இவையெல்லாம் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தன.

பகிரங்கமாக இப்படியென்றால் ரகசியமாக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவின் தேசிய தலைமையில் இருந்து பலரும், ‘மீண்டும் கூட்டணிக்கு வாருங்கள். அப்போதுதான் திமுக கூட்டணிக்கு ஈடு கொடுக்க முடியும்’ என்ற மெசேஜ்களை அனுப்பி வருகிறார்கள்.

எடப்பாடியுடன் நல்ல தொடர்பில் இருக்கும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரும் பாஜகவுக்காக எடப்பாடியிடம் பேசிவிட்டனர்.

நேற்று நள்ளிரவு டெல்லியில் நடந்த பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் பற்றிய ஆலோசனையில் கூட தமிழ்நாட்டில் உடனடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டுமா என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

இந்த பின்னணியில்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தரப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி கெடு  விதிக்கப்பட்டிருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷா தரப்பில் இருந்து ஒரு முக்கியமான செய்தி நேரடியாகவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில், ‘பாஜக இதுவரைக்கும் உங்களுடன் மிக கனிவாகவே பேசி வருகிறது.  கூட்டணிக் கதவுகள் திறந்திருக்கின்றன என்று  பேட்டியளித்தோம். அதன் பின் தமிழ்நாடு வந்து பிரதமர் மோடிஜியே எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பற்றி புகழ்கிறார். வெளிப்படையாகவும், தனிப்பட்ட முறையிலும் பாஜக இப்போது வரை உங்களை மதித்து பேசி வருகிறோம். இந்த நிலையில் மார்ச் 5 ஆம் தேதிக்குள் கூட்டணி பற்றிய நல்ல முடிவைச் சொல்லுங்கள். இல்லையென்றால்  அடுத்து ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்று அமித் ஷா தரப்பு அனுப்பிய செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொறுத்தது போதும் பொங்கியெழலாம் என்ற முடிவுக்கு அமித் ஷா வந்துவிட்டார்” என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரங்களில்.

இந்த சூழலில்தான் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி புகழ்ந்தது பற்றி  கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்  கூட பாராட்டும் விதத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சி செய்திருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.

என்னதான் பாராட்டினாலும், பாஜக தனக்கு எதிர்க்கட்சிதான் என்பதை எடப்பாடி சொல்லிவிட்டார். மார்ச் 5 க்குப் பிறகு அமித் ஷா சொன்ன விளைவுகள் என்ன என்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.8000 விலையில் 5ஜி ஸ்மாா்ட் போன்… பிரபல நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவல்!

’இயக்குநர் பாலா அடித்தாரா?’ : மமிதா பைஜூ மீண்டும் விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts