கொடநாடு கொலை வழக்கில் மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் இன்று (செப்டம்பர் 2) தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை நடந்தது.
இந்த கொள்ளையை தடுக்கமுயன்ற வீட்டு காவலாளி ராம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து இறந்தது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் சசிகலாவின் உறவினர் விவேக்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள், அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள்!
இந்நிலையில் கொடநாடு வழக்கை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மனோஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் முன்பு இன்று (செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் நடந்து வரும் விசாரணையில் மூடி மறைக்கப்பட்ட பல விபத்துகள் மற்றும் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் வழக்கு விசாரணைக்கு எந்தவொரு கால நிர்ணயமும் செய்யக் கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா