வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சித் தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மயிலம் மக்கள் மனம் மகிழம்பூவாய் மகிழ; செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க; செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட; நான் சுகவாசி அல்ல பந்தா-வாசி அல்ல. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல சந்நியாசி!
போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும் பாலூர் ஆரணியே அன்ன பட்சியே நினை என் மனதின் ஆழ்நிலை சக்தியாய் தாயார் மகளாய் துதித்து பணி செய்ய ஆணையிடுவாய். தாழ் திறவாய் தரணி போற்றும் ஆரணியே” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மன்சூர் அலிகான் பேசுகையில்,
“டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஒப்புதல் தரும் வரை அமைதியாக இருக்க முடியாது. அவர்கள் ஒப்புதல் தரும் வரை காத்திருந்தால் தேர்தலே முடிந்து போய்விடும்.
மத அடிப்படை வாதத்திற்கு முற்றிலும் எதிரான ஜனநாயகப் புலிகள் கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன்.
அதற்காக வரும் மார்ச் 5ஆம் தேதி மயிலம் முருகன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன்.
கூட்டணிக்காக ஒரு சிலர் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவேளை கூட்டணி அமையாவிட்டாலும், நான் ஆரணியில் போட்டியிடுவது உறுதி’ என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா