ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும் அவரது மரணத்தின்போதும் ஊடகங்களில் உலா வந்த வதந்திகளைப் பட்டியலிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மனோஜ் பாண்டியன் கூறியிருந்தார். இது வெறும் அனுமானமே தவிர இதில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஒரு ஆதாரங்களும் ஆவணமாக அளிக்கப்படவில்லை.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தும் பல மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டும் அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் அளிக்கப்பட்டிருக்கும் என்று எந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையும் தெரிவிக்கவில்லை.
ரத்தப் பரிசோதனை அறிக்கையின்படி அவரது உடலில் விஷத்தின் தடயம் இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர்.
எனவே இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லாததால் தவறானது ஆதாரமற்றது என்று நிராகரிக்கப்படுகிறது.
மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் தலையில் யாரோ மரக்கட்டையால் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக பொறுப்பாளருமான பொன்னையன் கூறினார்.
இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. ஆணையத்தால் பரிசீலிக்கப்படவேண்டும். ஆனால் பொன்னையன் ஆணையத்தின் குறுக்கு விசாரணையில், தன் கூற்று தான் கேட்ட சில வதந்திகளின் அடிப்படையில் இருந்தது என்பதை பொன்னையன் ஒப்புக் கொண்டார்.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலையில் உடல் ரீதியான வன்முறையின் எவ்வித அடையாளத்தையும் மருத்துவர்கள் குறிப்பிடவில்லை.
முதல்வர் மறைவுக்குப் பின் அவருக்கு எம்பாமிங் செய்தவர் என்ற முறையில் டாக்டர் சுதா சேஷையன் சான்றுகள் இச்சமயத்தில் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஊடகங்களில் பரவிய வதந்திகள் போல ஜெயலலிதாவின் முகத்தில் துளைகள் ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். உண்மையாகவே உடலில் துளைகள் இருந்திருந்தால் எம்பாமிங் செய்யும்போது துளைகள் வழியாக உடல் திரவ ஓட்டம் இருந்திருக்கும், ஆனால் அவ்வாறு ஏதும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஆகவே அவரைப் பொறுத்தவரை உடல் ரீதியான வன்முறைக்கான எந்த தடயமும் காணப்படவில்லை” என்று ஆணையம் தன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
–வேந்தன்
கார்டனில் இருந்து சசியை வெளியேற்றிய ஜெ: கிருஷ்ணபிரியா வாக்குமூலம்!
பெங்களூருவில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் நடத்திய கூட்டம்!