மனோபாலா மறைவு அதிமுகவுக்கு இழப்பு : ஈபிஎஸ்

Published On:

| By Kavi

நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மறைவு அதிமுகவுக்கு இழப்பு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான மனோபாலாவின் மறைவு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ‘மனோபாலாவின் மறைவு அதிமுகவுக்குப் பெரிய இழப்பு” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளரும், திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மனோபாலா ‘ஆகாய கங்கை’ என்ற திரைப்படத்தை முதன்முதலில் இயக்கியதோடு, தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

மேலும், பல்வேறு திரைப்படங்களில் நடித்து, மக்கள் அனைவரையும் தனது நகைச்சுவை நடிப்பால் சந்தோஷப்படுத்தியவரும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் மனோபாலா கழகத்தின் மீதும்,

தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு, தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளராகக் கழகத்தின் கொள்கைகளை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் நகைச்சுவையோடு பல்வேறு பொதுக்கூட்டங்கள் வாயிலாக எடுத்துரைத்து, சிறந்த முறையில் கழகப் பணிகளை ஆற்றியவர்.

தேர்தல் காலங்களில் இவருடைய பிரச்சாரப் பணிகள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவை. அன்னாரது இழப்பு கழகத்திற்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகுந்த பேரிழப்பாகும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரியா

மனோபாலா பாராட்டியது நெஞ்சில் நிழலாடுகிறது: முதல்வர் உருக்கம்!

மனோபாலாவுக்கு இளையராஜா இரங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share