மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இன்று (டிசம்பர் 28) டெல்லியில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
டிசம்பர் 26 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் காலமானார். இந்நிலையில், அவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை மன்மோகன் சிங்கின் உடல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டது.
அங்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அதன் பின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு செங்கோட்டைக்குப் பின் பக்கம் யமுனை நதிக்கரையில் இருக்கும் நிகம்போத் காட் மயானத்தை அடைந்தது.
இறுதி ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன் சிங் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமர்ந்து சென்றார்.

11 மணியளவில் நிகம்போத் காட் மயான பகுதிக்கு மன்மோகன் சிங்கின் உடல் சென்றடைந்தது. இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் உடலை இறுதி சடங்கும் நடக்கும் இடத்துக்கு குடும்பத்தினரோடு ராகுல் காந்தியும் சுமந்து சென்றார்.
அங்கே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சென்று மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பூட்டான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்க்யல் வாங்சக் நேரில் வந்து மன்மோகன் சிங்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

மன்மோகன் சிங்கின் மனைவி கவுர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் கார்கே, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சீக்கிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, மன்மோகன் சிங்கின் உடல் சந்தனக் கட்டைகளால் ஆன சிதையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, முழு ராணுவ மரியாதையோடு மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்ட்டப்பட்டது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வன்கொடுமை… எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேரிடம் விசாரணை… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு