மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!

அரசியல்

கடலூர் மாவட்டத்தில் சாதிப் பதற்றம் சமீப ஆண்டுகளாக இல்லை என்ற நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து விசிக, பாமக ஆகிய இரு கட்சிகளின் செயல்பாடுகளும்  மீண்டும் சாதிப் பதற்றத்தை ஏற்படுத்தும்படி  அமைந்திருக்கின்றன.

“கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மஞ்சக்கொல்லை கிராமத்தில் வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொக்கரித்துள்ளனர்.

கடலூர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்று (நவம்பர் 7) பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘கடலூர் மாவட்ட காவல்துறை பாரபட்சமாக நடந்துகொள்கிறது. பாமகவை அடக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாசோடு செய்தியாளர்களை சந்தித்த வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, ‘காவல் கண்காணிப்பாளர் முன்னிலையிலேயே வன்னியர் சங்க தலைவர் கழுத்தை அறுப்போம் என்று விசிக பிரமுகர் பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இன்று (நவம்பர் 7) மாலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “விசிக கொடியை அறுத்தது , கம்பத்தை வெட்டியது, பீடத்தை உடைக்க முயற்சித்தது, தலித்துகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றில் தொடர்புடைய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சார்ந்த அனைவரின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

என்னதான் நடந்தது?

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமம்தான் மஞ்சக்கொல்லை. இந்த கிராமத்தில் வன்னியர் சமுதாயத்தினர் அடர்த்தியாக  வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் இருந்து சுமார் இரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இன்னொரு கிராமம் பு. உடையூர். இங்கே தலித் மக்கள் அடர்த்தியாக வசிக்கிறார்கள்.

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணியளவில் பு.உடையூர் கிராமத்தின் ஓரமாக இருக்கும் சுடுகாட்டு பகுதியில், மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர்கள் கூட்டாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். தங்களது குழுவில் விட்டுப் போன  மஞ்சக் கொல்லையில் இருக்கும் செல்லதுரையை, மது அருந்த வருமாறு அழைத்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற பு. உடையூர்  பையன்  ஒருவரை அழைத்து, ‘உனக்கு எந்த ஊருடா?’ என கேட்டுள்ளனர்.

‘எங்க ஊருக்கே வந்து என்னையே எந்த ஊருனு கேட்குறியா?’ என்று அந்த இளைஞர் எதிர்த்துப் பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஆகியுள்ளது. இதையடுத்து, போன் போட்டு பு. உடையூரில் இருக்கும் தனது நண்பர்களை அழைத்திருக்கிறார் அந்த இளைஞர்.  இந்த கேப்பில், பு. உடையூரில் இருந்து சுடுகாட்டுப் பகுதிக்கு பத்து பேருக்கு மேல் வர, மஞ்சக் கொல்லைக்காரர்களோடு  கை கலப்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சகொல்லையில் இருந்து வந்து மது அருந்தியவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

செல்லதுரை மீது தாக்குதல்!

இது எதுவுமே தெரியாமல் செல்லதுரை மஞ்சக் கொல்லையில் இருந்து புறப்பட்டு பு. உடையூருக்கு மது அருந்த சென்றிருக்கிறார். வெளியூரில் வேலை பார்க்கும் செல்லதுரை தீபாவளிக்காக ஊருக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பு. உடையூர் சுடுகாட்டு பகுதியை நோக்கிச் சென்ற செல்லதுரையை மறித்திருக்கிறார்கள் அந்த ஊர் இளைஞர்கள். ‘நீ யாரு?’ என்று கேட்க,  தனது நண்பர்கள் வரச் சொன்ன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் செல்லதுரை.

இப்பதான் அவங்க அடி வாங்கிட்டுப் போயிட்டானுங்க. அடுத்து நீ வந்திருக்கியா என்றவர்கள் செல்லதுரையை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். அதை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.   ஊரில் செல்லதுரை தாக்கப்பட்ட தகவல் போலீஸுக்கு செல்ல, உடனடியாக போலீஸ் வந்தபோது செல்லதுரைக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்து மஞ்சக்கொல்லை காரர்களும் அங்கே திரண்டுவிட்டனர்.

செல்லதுரையை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக போலீஸ் அனுப்பி வைக்க முயல… மஞ்சகொல்லையைச் சேர்ந்தவர்களோ ஆம்புலன்ஸை மறித்து, ‘தாக்கியவர்களை கைது செய்தால்தான் ஆம்புலன்சை விடுவோம்’ என்றனர், போலீஸாரோ, ‘அடிபட்டிருக்காரு. அவரும் உங்க  ஊர்க்காரரு. முதல்ல அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம்’ என்று சொல்லி ஆம்புலன்சை புறப்பட வைத்தனர்.

இதன் பின் தாக்கப்பட்ட செல்லதுரையிடம் போலீஸார் விசாரித்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டனர். இந்த அடிப்படையில் செல்லதுரையை தாக்கிய பு.உடையூர் காரர்களை  மறுநாள்  நவம்பர் 2 ஆம் தேதி கைது செய்தனர் போலீஸார்.  (வழக்கு எண் 330/2024).

விசிக – பாமக ஆர்ப்பாட்டம்!

தாக்கப்பட்ட செல்லதுரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். இந்த நிலையில், மறுநாள் நவம்பர் 3 ஆம் தேதி காலை பாமக கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தாஅருள்மொழி உள்ளிட்டோர் செல்லதுரை குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக மஞ்சக்கொல்லை சென்றனர்

உணர்ச்சி மிகுதியாக இருந்த வன்னியர் சங்கத்தினர் திடீரென மஞ்சக்கொல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  செல்லதுரையை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

அந்த மறியலில் பேசிய வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி,   “வன்னியர்களுக்கு அடி கொடுத்துதான் பழக்கம். ஆனால் நீங்க அடி வாங்கிட்டு வந்திருக்கீங்க… வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கு.  இதை சும்மாவிடமாட்டோம்” என்று பேசினார்.

இந்த நிலையில் பு.தா.அருள்மொழி சென்றதும் அந்த ஊரைச் சேர்ந்த அதிமுககாரரான அருள்செல்வி கோபமாக,  ‘இந்த ரெண்டு கட்சிகளும்  (பாமக, விசிக) வேணாம்னுதானே நாம அமைதியா இருக்கோம். ஆனா இந்த கட்சிங்களாலதான் பிரச்சினையே வருது’ என்று கத்திக் கொண்டே மஞ்சக்கொல்லையில் வைக்கப்பட்டிருந்த விசிக கொடிக்கம்பம், பாமக கொடிக்கம்பம் இரண்டையும் கடப்பாறையால்  உடைக்க முயன்றிருக்கிறார். அவர் விசிக கொடிக்கம்பத்தை உடைக்க முயலும் காட்சி மட்டும் வீடியோவாக பரவ, பிரச்சினை அடுத்த கட்டத்துக்கு போனது.  இதையடுத்து விசிகவினர் கொந்தளித்து போலீஸில் புகார் செய்தனர்.

’விசிக கொடிக்கம்பத்தை உடைக்க முயற்சி செய்தவரை கைது செய்ய வேண்டும். மஞ்சக்கொல்லையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அருள்மொழியை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் ’ என்றும் வலியுறுத்தி,  நவம்பர் 4 ஆம்தேதி விசிகவினர் கடலூரில் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

அந்த ஆர்பாட்டத்தில் விசிகவின்  மாநில துணைச் செயலாளர்  செல்வி முருகன், துணை மேயர் தாமரைச் செல்வன் மாவட்டச் செயலாளர் அறிவுடைநம்பி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில்  செல்வி முருகன் பேசுகையில்,  “விசிக கொடிக் கம்பத்தை அறுத்தவர்களின் கழுத்தை அறுப்போம்.  கலவரத்தைத் தூண்டும்படி பேசும்  வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் கழுத்தையும் அறுத்துருவோம்’  என்று பேச பிரச்சினை அடுத்த கட்ட தீவிரத்தை எட்டியது.

காவல்துறையை சாடும் ராமதாஸ்!

விசிகவின் இந்த வன்முறைப் பேச்சு வீடியோவும் சமூக தளங்களில் பரவியது. உடனடியாக பாமக சார்பில் நவம்பர் 5  ஆம் தேதி கடலூர் எஸ்.பி.யிடம்  விசிக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கப்பட்டது.  இதன்படி விசிக மாநில துணைச் செயலாளர் செல்வி முருகனை கைது செய்தனர் போலீஸார். விசிக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற துணை மேயர் தாமரைச் செல்வன், மாவட்டச் செயலாளர் அறிவுடை நம்பி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல விசிக கொடிக்கம்பத்தை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் 5 ஆம் தேதி  அருள்செல்வி, அருள்ராஜ், பாமக மாசெ செல்வம் மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு  (150/24 ) செய்யப்பட்டது.

பாமக தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி கடலூர் உள்ளிட்ட இடங்களில் விசிகவினரை கண்டித்தும், விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தியது.

இப்படி இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்த நிலையில்தான் 6 ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இப்பிரச்சினையை அடுத்த கட்ட பதற்றத்துக்கு அழைத்துச் சென்றார்.

மேலும், நவம்பர் 7 ஆம் தேதி இந்த பிரச்சினை குறித்து செய்தியாளர் சந்திப்பும் நடத்தி,  ‘கடலூர் மாவட்ட காவல்துறை பாரபட்சமாக நடந்துகொள்கிறது. காவல்துறைக்கு ஈரல் மட்டுமல்ல மூளையும், இதயமும் அழுகிவிட்டது.  எத்தனை நாளைக்கு எங்கள் மேல் எஸ்சி,எஸ்,.டி. வழக்குப் போடுவீர்கள்? இனியும் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம். பாமகவை அடக்க முடியாது’ என்று கூறியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

காவல்துறை தரப்பில் என்ன சொல்கிறார்கள்!

சில போலீஸ் உயரதிகாரிகளிடம் இப்பிரச்சினை குறித்து பேசியபோது,

“தனிப்பட்ட பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்கி சாதி பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்றினார்கள்.  இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் 6 ஆம் தேதி கடலூரில் பாமக நடத்திய போராட்டத்துக்கு பிரச்சினையின் அடிப்படையான மஞ்சக்கொல்லை கிராமத்தில் இருந்து 50 பேர் கூட வரவில்லை. அதேபோல இதே பிரச்சினைக்காக 4 ஆம் தேதி கடலூரில் விசிக நடத்திய போராட்டத்துக்கும்  பு.உடையூர் கிராமத்தில் இருந்து 10 பேர் கூட வரவில்லை.

இந்த இரு கிராமங்களிலும் பாமக, விசிக இரண்டு கட்சிகளுமே வலுவாக இல்லை.  இன்னும் சொல்லப் போனால் இந்த கிராமங்களில் இருக்கும் கொடிக்கம்பங்கள் கூட வெளியூர் காரர்களால் வைக்கப்பட்டவை.

மது அருந்தும்போது ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையை சாதி பிரச்சினையாக்கி அதை டாக்டர் ராமாதஸும் அறிக்கை, பிரஸ்மீட் என்று பெரிதாக்கிவிட்டார்.

விசிக, பாமக இரு நிர்வாகிகளுமே  களத்தில் நடக்கும் உண்மைகளை தங்கள் தலைமைக்கு சொல்ல வேண்டும். தலைமைகளும் தீர விசாரித்து கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.

எந்த பாரபட்சமும் இல்லாமல்  இரு தரப்பிலும் கொடுத்த புகார்கள் மீது உரிய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

இதற்கிடையே காவல்துறைக்கு திடீரென ஓர் அலர்ட் மெசேஜ் வந்திருக்கிறது. அதாவது வட மாவட்டங்களில் எங்கேனும் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்பதுதான் அந்த மெசேஜ். உடனடியாக போலீஸார் விசாரித்து  பாமக ஆதரவு இயக்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசத்தை நேற்று இரவு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். இன்று காலை அவரை விட்டுவிட்டனர்.

இந்த பின்னணியில் வட தமிழகத்தில் பாமக, விசிக இரு தரப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் போலீஸார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“செயல் புயலாக செந்தில் பாலாஜி” : கோவை திமுக நிர்வாகிகள் கூட்டம் குறித்து ஸ்டாலின்

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ – சூரனை வதம் செய்த முருகன்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *