சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: மமக முற்றுகை போராட்டம்!

Published On:

| By Selvam

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஏழு சுங்கச்சாவடிகளில் இன்று (செப்டம்பர் 16) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இந்தநிலையில், விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கரிய மங்கலம் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளை புதிதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒரு மாதத்திற்கு ரூ.1,386 கோடி வசூலாவதாகவும், இதில் சுமார் ரூ.300 கோடி அதிகார வர்க்கங்களுக்கு கையூட்டாக பிரித்து கொடுக்கப்படுகிறது என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து டோல்கேட் என்கிற வழிப்பறி கொள்ளை… முடிவு எப்போது?’ என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூர், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருச்சி மாவட்டம் துவாக்குடி, மதுரை மாவட்டம் கப்பலூர், நெல்லை மாவட்டம் நாங்குநேரி என ஏழு சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பரனூர் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக, பரனூர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், நடைபெற்ற போராட்டத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினரும் பங்கேற்றனர். மேலும், போராட்டம் நடைபெற்ற சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செல்வம்   

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகை துன்புறுத்தல் விவகாரம்… முதல்வன் பட பாணியில் அதிரடி முதல்வர்!

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் புதிய திருப்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share