புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது இந்திய அரசியலில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் யார் இந்த மணிஷ் சிசோடியா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
மணிஷ் சிசோடியா உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் 1972-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை அரசு பள்ளி ஆசிரியர் என்பதால் மணிஷ் சிசோடியாவை அரசு பள்ளியில் படிக்க வைத்தார்.

இதழியலில் ஆர்வமாக இருந்த மணிஷ் சிசோடியா இளங்கலை பட்டம் பெற்றார். ரேடியோ ஜாக்கியாக தனது முதல் பணியை துவங்கினார். 1996-ஆம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோவில் ஜீரோ ஹவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் 1997 முதல் 2005-ஆம் ஆண்டு வரை ஜீ செய்தி தொலைக்காட்சியில் நிருபர், செய்தி தயாரிப்பாளர், செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
பத்திரிகையாளர் பணியிலிருந்து விலகிய மணிஷ் சிசோடியா, டெல்லி முதல்வராக உள்ள கெஜ்ரிவாலுடன் இணைந்து கபிர் என்ற அரசு சாரா நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமானது மக்களுடைய பிரச்சனைகளை அரசாங்க அதிகாரிகளிடம் எடுத்து செல்லும் ஒரு நிறுவனமாக இருந்தது.
அரசியலில் நாட்டம் கொண்ட மணிஷ் சிசோடியா, 2011-ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டார். இதற்காக அவர் பல முறை சிறை சென்றுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை நிறுவுவதற்கு காரணமாக இருந்த மிக முக்கியமான ஒருவர் மணிஷ் சிசோடியா.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாட்பராஞ் தொகுதியில் போட்டியிட்ட மணிஷ் சிசோடியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நகுல் பரத்வாஜை 11,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ந்து 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாட்பராஞ் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார்.
2015-ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தவுடன், மணிஷ் சிசோடியாவிற்கு துணை முதல்வர், நிதி, கல்வி, சுற்றுலா, தொழிலாளர் நலன் என பலம் வாய்ந்த துறைகள் ஒதுக்கப்பட்டது. இவர் துணை முதல்வராக பதவியேற்றவுடன் பொதுக்கல்வியில் தீவிர சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்தார். பொதுக்கல்வி திட்டத்திற்கான நிதியை இரட்டிப்பாக்கினார். டெல்லி பட்ஜெட்டில் கல்விக்காக கால் பங்கு நிதி ஒதுக்கப்பட்டது.
பழைய பள்ளி கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டது. வகுப்பறைகளில் நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் விளையாடுவதற்காக கால்பந்து, ஹாக்கி மைதானங்கள் அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டது.

சிசோடியாவின் முயற்சியின் காரணமாக 2016-ஆம் ஆண்டு முதல் டெல்லி அரசு பள்ளிகள் 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தனியார் பள்ளிகளை விட சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது.
2017-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற உலகளாவிய கல்வி மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மத்தியில் டெல்லி கல்வி மாடல் குறித்து மணிஷ் சிசோடியா பேசிய போது, “நாட்டில் தரமான கல்வி முறையை உருவாக்குவதே சமூகத்திற்கான உண்மையான பங்களிப்பாகும். மேலும், பயங்கரவாதம், மாசுபாடு, ஊழல், பாலின பாகுபாடு உள்ளிட்ட இன்றைய சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும்.” என்று பேசினார்.
இப்படி கல்வி துறையில் பல மாற்றங்கள் செய்தாலும், 2022-ஆம் ஆண்டு டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவில் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் கட்டுவது குறித்து சிசோடியா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து ஊழல் தடுப்பு ஆணையமான லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்தில் புதிய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிபிஐ விசாரணையில் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய சிபிஐ, மணிஷ் சிசோடியாவை கைது செய்தது.
நேற்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு மார்ச் 4-ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் இப்போது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணையில் உள்ளார். மணிஷ் சிசோடியா கைது இந்திய அரசியலில் மிக முக்கியமான பேசுபொருளாக இருந்து வருகிறது.
செல்வம்
146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்… அரிதிலும் அரிதான சாதனை படைத்த நியூசிலாந்து அணி!