பிஜேபியில் சேர பேரம்: அதிரவைத்த டெல்லி துணை முதல்வர்!

அரசியல்

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் இணைந்தால், அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருகிறோம் என பிஜேபி அனுப்பியிருக்கும் தகவலுக்கு, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிலடிப் பதிவு, இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 19ம் தேதி, அவருடைய வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியில் உள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர்.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை சிபிஐ மறுத்திருந்தது.

இந்த நிலையில், தன்னை பாஜகவில் சேர அழைப்பு வந்திருப்பதாக மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 22) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ பாஜகவிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியை உடைத்துக் கொண்டு, பிஜேபியில் வந்து சேர்ந்தால், அனைத்து சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்று அவர்கள் என்னிடம் பேரம் பேசுகிறார்கள். நான் மகாராணா பிரதாப்பின் வம்சத்தைச் சேர்ந்தவன். என் தலையே போனாலும், ஊழல்வாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு முன்னால் தலைவணங்க மாட்டேன்.

என்மீதான வழக்குகள் பொய்யானவை. நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

மோடிக்கு மக்கள் லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: மணீஷ் சிசோடியா

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *