மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்ககோரி நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரு சமூகங்களுக்கிடையேயும் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்தநிலையில் மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூக பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் ஆடையின்றி நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தசூழலில் நேற்று துவங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் மணிப்பூர் விவகாரம் எதிரொலித்தது. இதனால் இரு அவைகளும் முடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச மறுப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவரும் மாநிலங்களவை தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில் அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செல்வம்
வேலை நிறுத்தம்: நூற்பாலை உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!