கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கிடையேயான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த கலவரத்தில் 200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி போரோபெக்ரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தை தீவிரவாதிகள் குழு தாக்கியது. இந்த தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர். இதில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த பகுதியில் நிவாரண முகாம்களில் வசித்து வந்த மெய்தி இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போயினர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக மெய்தி இன மக்கள் குற்றம்சாட்டினர்.
காணாமல் போனவர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி மெய்தி இன மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜிரிமுக் என்ற கிராமத்தில் ஆற்றின் அருகே காணாமல் போனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மெய்தி மக்கள் வீதிகளில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் தலைநகரான இம்பால் மாவட்டத்தில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைத்தனர். அரசு அலுவலகங்களை சூறையாடினர்.
இம்பாலில் உள்ள முதல்வர் பைரன் சிங் வீட்டை அடித்து நொறுக்கினர். மேலும், அவரது மருமகன் ராஜ்குமார் இமோ சிங் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை குறிவைத்து தாக்கினர். இதனால் மணிப்பூரில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.
கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூர் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக கலவரங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் இரு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையாக இருந்தது.
பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விருதுநகர்: பசியோடு வீட்டுக்குள் நுழைந்த பெரியவரை கம்பத்தில் கட்டிவைத்த அவலம்!
வீட்டுக்குள் நுழைந்து வளர்ப்பு நாயைத் தாக்கிய சிறுத்தை: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Comments are closed.