ஸ்ரீராம் சர்மா
கொத்துக் கொத்தாய்
மலையிறங்கிவரும்
நச்சரவங்கள் போல்தான்
அந்த வீடியோவில்
மணிப்பூர் நபும்சகர்கள்
ஆவேசமாய்
வந்து கொண்டிருந்தார்கள்…
இரண்டு
அப்பாவி முயல்களை
விரட்டியபடி !
***
மானமழிய
மனமழிய
மருண்ட விழி சோர
முடிவற்ற பாதையினூடே
தட்டுத் தள்ளாடி வந்த
பெண்மையைக் காணக் காண
நெஞ்செரிந்து எரிந்து
ஆலகால நீலமாகியது.
***
ஏ…
மலைசாதியே என்று
மலிந்து பேசிய மைத்தேயிகளே…
நீங்கள்
மனித சாதியே இல்லையென்று
உலகரங்கம் இன்று
தீர்ப்பளித்துவிட்டதே !
***
நாணப் போகிறீர்களா ?
இல்லை
நாண்டு கொண்டு
சாகப் போகிறீர்களா ?
***
தாயை தங்கையை
ஈரக்குலை நடுங்க
ஈனரக்கரென
அடித்திழுத்து வந்தவரெல்லாம்
சோறுண்ணும் ஜென்மங்கள்தானா ?
உங்களுக்கு,
ஆதார் கார்டும் ஒரு கேடா ?
***
புயலிடைச் சிக்கிய
இள வாழையென,
‘ஐயோ’ என, ‘அம்மே’ என
விதிவிட்டபடி வீதிவழி வந்த
நாரியரிருவரும்
பாரத மாதாவின்
மகள்களில்லையா ?
***
நாய்கள் செய்யுமோ
இந்த நாராசத்தை?
பேய்களும்தான் செய்யுமோ
இந்தப்
பெரும் பாதகத்தை?
***
அறுநூறுக்கும் மேலான
உயிர்களையும் குற்றுயிர்களையும்
உள்ளிறக்கிய பின்னும்
கோரக் குடலின்னும் நிரம்பலையோ ?
***
1939 ல் வெடித்த
‘நூபி லான்’ எனும்
பெண்களின் போர்
மீண்டுமிங்கே
வெடித்தெழ வேண்டுமோ ?
***
அன்றொரு நாள்
வியட்நாம் மண்ணில்
அறியாத பிள்ளை ஒன்று
அம்மணமாய் வந்ததற்கே
ஆவி பதறிப் போன
நாகரீக உலகம்
இன்று
சம்மட்டியால் அடித்ததுபோல்
சாய்ந்து கிடக்கிறதே !
***
ஏ…
கருப்பு இதயம் படைத்த
மணிப்பூர் மூடர்களே…
உங்களை
கண்ணகி பிறந்த மண்
காறித் துப்புகிறது.
***
மே நான்கில் நடந்த
பாதகச் செயலுக்கு
ஜூலையில் மாரடிக்கும்
ஆட்சியாளர்களை எண்ணி
நாகரீக உலகம்
‘ச்ச்சீச்சீ’ கொட்டிப் பழிக்கிறது.
***
மூட சனங்கள்
மெயித்தேயி என்றும்
குக்கி என்றும் பிரிந்து நிற்க…
மாதக்கணக்கில்
மானுடம் நசுங்கிய போதும்
நீரோ மன்னனாய்
பாராமுகம் காட்டிய
ஆட்சியாளர்களை நம்பி
இனிப் பலனில்லை.
***
நீதிமன்றமே தலையிடுக !
கறந்த இடத்தையும்
பிறந்த இடத்தையும்
ஊர் பார்க்க இழுத்து வந்து
இந்தியப் பெண்மையை
இடுகாட்டிலிட்ட அந்த
உன்மத்த நாய்மகன்களை
சட்டத்தின் வழியே ஆழ சபித்திடுக !
***
ஜனநாயகத்துக்கு
ஆயிரம் புறவாசல்கள்.
போகட்டும்.
எங்கள் அன்னையரின்
ஜனனேந்திரிய மானத்தை
இனியேனும் காத்திடுக !
***
ஓ… குக்கித் தாய்மாரே !
வெட்கித்
தலைதாழ வேண்டியது
நீங்களல்ல !
உங்கள் கற்பறத்தை
காட்டு நாய்களால்
களவாடிவிட முடியாது !
***
ஓ…
மணிப்பூர் மாதரசிகளே !
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்
என்றோதிய
வள்ளுவன் பிறந்த
மண்ணுமக்கு
என்றும் துணையிருக்கும் !
முன்னிலும் மிடுக்கொடு
எழுக !
பொலிக !
***
கட்டுரையாளர் குறிப்பு:
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
வேலை நிறுத்தம்: நூற்பாலை உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!
இளம் வீரர்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்: உண்மையை உடைத்த ஷிகர் தவான்
Comments are closed.