மணிப்பூர் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
மணிப்பூரில் இரண்டு இன குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் பெரும் வன்முறையாக மாறி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கடைகள் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்.பி க்கள் மணிப்பூரை நேரில் சென்று இரண்டு நாட்களாக ஆய்வு மேற்க்கொண்டனர்.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 2) எதிர்க்கட்சி எம்.பிக்கள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினர்.
அப்போது மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், குடியரசுத்தலைவருடனான சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “ மணிப்பூர் வன்முறை தொடர்பாக இந்தியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த 31 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவருடன் ஆலோசித்தோம். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் மணிப்பூர் சென்றிருந்தனர். . . கலவரத்தில் பாதிக்கப்பட்ட 7,000 க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கியுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை வைத்தோம்” என்ற அவர், “ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசும் போது மைக் ஆப் செய்யப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பேனா நினைவு சின்னம்: அமைச்சர் எ.வ.வேலு புதிய தகவல்!
“விசாரணைக்கு ஒத்துழைக்காததால் செந்தில் பாலாஜியை கைது செய்தோம்” – துஷார் மேத்தா