மணிப்பூர் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்காமல் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று (ஜூலை 22) நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டபின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “திமுக மணிப்பூர் விவகாரத்தில் தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானங்கள் கொண்டு வருவதற்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அதிமுக இதுவரை வாயே திறக்கவில்லை, இப்படி மௌனம் சாதிப்பது ஏன்?. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் யாருக்கும் அடிமையில்லை என்கிறார். எனினும் மணிப்பூர் விவகாரத்தில் ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை. இதன்மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ட்விட்டர் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், “மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோன்ற இழிச்செயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங்க்கை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
அதுபோன்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
முதியோர் உதவி தொகை உயர்வு : அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
“மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்”- ஜெயக்குமார்