மணிப்பூரில் கடந்த ஒன்றரை வருடங்களாக இனக்கலவரம் தொடர்ந்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பிரேன் சிங் இன்று (பிப்ரவரி 9) தனது பதவியை ராஜினாமா செய்தார். Manipur CM Biren Singh resigns
இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது.
இது கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இரு பழங்குடியின பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, உலகையே அதிர்ச்சியடைய செய்தது.
ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்போதும் இரு தரப்பினரும் எதிரெதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் ஆளும் பாஜகவின் கூட்டணியில் இருந்து கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி விலகியுள்ளது. மேலும் பிரேன் சர்மாவின் தலைமை மாற்றத்தை பாஜக எம்எல்ஏக்களே கோரி வருகின்றனர்.
இதற்கிடையே இனக்கலவரத்தை தூண்டும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பேசும் ஆடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடரும் இனக்கலவரம், பதவி விலகக்கோரும் எதிர்க்கட்சிகள், சொந்த கட்சியினரின் எதிர்ப்பு, ஆடியோ சர்ச்சை என பைரேன் சிங் தள்ளாடி வந்தார்.

இந்த நிலையில் பிரேன் சிங் இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று மாலையில் இம்பாலில் உள்ள மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் பிரேன் சிங்.