மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோதம் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.
அப்போது காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி பேசும்போது, “இந்திய மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை. எதிர்க்கட்சிகளுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் கிடையாது. பெயரை மாற்றிக்கொண்டு இந்தியாவை ஆளலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார். பிரதமர் தனது உரையை தொடங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் பேசியபிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவை நடவடிக்கைகளை மீறியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை நடைபெற்றதில்லை என்று காங்கிரஸ் எம்,பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் இது மிகவும் மோசமானது. எதிர்க்கட்சி தலைவரை கேள்வி கேட்க விடாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவரை நடந்ததில்லை. மோடியும் அமித்ஷாவும் நாடாளுமன்ற நடைமுறைகளை சீர்குலைத்துவிட்டனர். இதனை நாங்கள் வலுவாக கையாளப்போகிறோம். இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்!