Mani Mandapam for Vijayakanth

விஜயகாந்துக்கு மணிமண்டபம் : முதல்வரிடம் பிரேமலதா கோரிக்கை!

அரசியல்

விஜயகாந்த்துக்கு பொது இடத்தில் மணிமண்டபம் கட்டித் தரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலை காலமானார். இருநாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகம், தீவுத் திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.

நேற்று மூன்று மணியளவில் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பொதுமக்களின் வெள்ளத்துக்கு மத்தியில் வந்த விஜயகாந்தின் உடல் நேற்று மாலை தேமுதிக அலுவலகத்தில், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப் பெரிய பேரு நமது தலைவருக்கு கிடைச்சிருக்கு. அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கு. தேமுதிக அலுவலகத்தில் இடம் நெருக்கடி இருந்ததால், தமிழக அரசிடமும், முதல்வர் ஸ்டாலினிடமும் பேசினோம். உடனடியாக தீவுத் திடலில் இடம் ஏற்பாடு செய்து கொடுத்தார். அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து இறுதி ஊர்வலத்துக்கு உதவி செய்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி.

Mani Mandapam for Vijayakanth

அதேசமயம் கார்பரேஷன் ஆணையர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கும் நன்றி. கேப்டன் இறுதி பயணம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த போலீசாருக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் ராயல் சல்யூட்.

நமக்கு வந்த புள்ளிவிவரப் படி கேப்டனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டவர்கள் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் என சொல்லியிருக்காங்க.

ஒரு எமோஷனல், பாசமான கூட்டத்தை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அதற்கு கேப்டன் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், கடைசி வரைக்கும் அனைவருக்கு உதவி செய்த குணமும் தான் இன்னிக்கு ஒட்டுமொத்த மக்களும் வந்து நின்னு பூ தூவி, அவர் சொர்க்கத்திற்கு செல்லக் கூடிய அளவுக்கு வாழ்த்தினாங்க. அவர்கள் அத்தனை பேருக்கும் இருகரம் கூப்பி நன்றிகளை தெரிவிச்சிக்கிறேன்.

உங்க எல்லோரையும் உள்ளே விட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், எங்களுடைய அலுவலகம் மிகவும் சின்ன இடம். முதல்வர், அமைச்சர்கள், விஐபிகள் எல்லோரும் வந்திருந்தாங்க. அதேமாதிரி இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த ஆளுநர், நிர்மலா சீதாராமன், அதிமுகவிருந்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், ஜி.கே.வாசன், அன்புமணி, அண்ணாமலை என வந்திருந்த அனைவருக்கும் நன்றி. யாருடைய பேராவது விட்டுபோயிருந்தா தப்பா எடுத்துக்காதீங்க.

ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேப்டனுக்கு இரங்கல் தெரிவித்தார். அவருக்கும் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் நன்றி.

அரசு மரியாதையுடன் கேப்டனுக்கு நல்லடக்கம் நடந்திருக்கிறது. சந்தன பேழையில் வைத்து சிறப்பான முறையில் அடக்கம் செய்திருக்கிறோம்.

அவர் எப்போதும் கையில் கட்சி மோதிரத்தை போட்டிருப்பார். அது அவரது கையிலேயே இருக்கட்டும், அந்த மோதிரம் மட்டுமல்ல அவர் ஆரம்பித்த இந்த கட்சி எப்போதும் அவரது கையிலேயே இருக்கட்டும் என்றுதான் மோதிரத்தோடும், கட்சி வேஷ்டியோடும் அடக்கம் செய்திருக்கிறோம் என்பதை தெரிவிச்சுக்கிறேன். எல்லோருக்கும் இந்த நேரத்துல உங்கள் அண்ணியாக நான் நன்றியை தெரிவிச்சிக்கிறேன்.

இன்னிக்கும் மிகவும் சோகமான நிலையில் இருக்கிறோம். நம்ம தலைவரை இழந்துவிட்டோம். ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தலைவருடைய கனவை வெற்றி பெறச் செய்து, அந்த வெற்றிக் கனியை கேப்டன் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள் தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றிநாள் என்று சூளுரைப்போம்.

பீச்சில் எப்படி எல்லா தலைவர்களுக்கும் சமாதி அமைத்திருக்கிறார்களோ, அதேபோன்று நமது தலைவருக்கும் நம்பர் 1 குவாலிட்டியில் சமாதி அமைக்கப்பட்டு, அவருடைய புகைப்படத்தை வைத்து 24 மணி நேரமும் விளக்கு எரியும். டெய்லி பூ அலங்காரம் செய்து, பூஜை செய்யப்படும். ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிப்படக் கூடிய கோயிலாக மாற்ற இருக்கிறோம்.

நம்ம தலைவர் எங்கேயும் போகல. நம்முடன் தான் இருக்கார். அந்த ஆத்மா சொர்க்கத்துக்குதான் போயிருக்கும். தர்மவான், கர்ணன் அவரு… வானுலகத்துல இருந்து நம் ஒவ்வொருவரையும் வாழ்த்திக்கிட்டுதான் இருப்பாரு.
திரையுலகை சேர்ந்த அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு சென்று சேர வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. எப்போதும் கேப்டன் இதைதான் சொல்லுவார். அதையே உங்கள் அண்ணியான நானும் சொல்கிறேன்” என்றார்.

இந்நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்  பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகப்பாண்டியன், விஜய பிரபாகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று (டிசம்பர் 30) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “தேமுதிகவை சேர்ந்த அத்தனை பேரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே கரமாக இணைந்து செயல்படுவோம். கேப்டனின் கொள்கை என்னவோ அதுதான் எங்களது லட்சியம்.
கேப்டனுக்காக பொது இடத்தில் ஒரு மணிமண்டபமும் சிலையும் வைக்க கேட்டிருக்கிறோம். முதல்வர்கிட்டையும், அமைச்சர்கிட்டையும் சொல்லியிருந்தோம். மீண்டும் அதை நினைவுப்படுத்துகிறேன்.

இது, ஒட்டுமொத்த தேமுதிக மற்றும் மக்களின் கோரிக்கை. சாதி, மதம், மொழி, கட்சிக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த மக்களும் வந்து அஞ்சலி செலுத்தினீர்கள். இதுதான் அவர் பெற்ற பாக்கியம்.

ஒரு மனிதன் பிறந்தது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அவரது இறுதி வரலாறாக இருக்க வேண்டும். அதை செய்திருக்கிறார் கேப்டன்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

நெல்லையில் நிவாரண உதவி : நேரில் வழங்கிய விஜய்

வருகின்ற 2024-ம் ஆண்டின்… முதல் ஜல்லிக்கட்டு போட்டி எங்கே நடைபெறுகிறது?

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *