பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கிச்சூடு!
பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தள முன்னாள் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் மீது இன்று (டிசம்பர் 4) துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இன்று காலை 9 மணியளவில் சுக்பிர் சிங் பாதல் சேவகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் சுக்பிர் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட சுக்பிர் சிங் அருகில் நின்ற அவரது ஆதரவாளர், அந்த நபரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காவல்துறை விசாரணையில், சுக்பிர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற நபர், நரெயின் சிங் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/PTI12_03_2024_000028B-1024x576.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக அகாலி தள கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் குஜ்ரால் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், “இந்தத் தாக்குதல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, சுக்பிர் பாதலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பஞ்சாபில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். பொற்கோவில் வாசல் முன்பே இதுபோன்ற துப்பாகிச்சூடு நடந்திருப்பது அரசின் முழுமையான தோல்வியை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
2009 – 2017 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பஞ்சாபின் துணை முதல்வராக இருந்தபோது, சுக்பிர் சிங் பாதல் பல்வேறு தவறுகள் செய்ததாக, அவருக்கு சீக்கிய மதத்தின் அதிகார நிர்வாகம் டிசம்பர் 2-ஆம் தேதி தண்டனை வழங்கியது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாபில் உள்ள குருத்வாராக்களுக்கு சென்று தினமும் ஒரு மணி நேரம் சேவகம் செய்து வந்தார். இந்தசூழலில் தான் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இன்று காலை சேவை செய்து கொண்டிருந்த சுக்பிர் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கஞ்சா விற்பனை : மன்சூர் அலிகான் மகனை சிக்க வைத்த காண்டக்ட் நம்பர்… தட்டி தூக்கிய போலீஸ்!
சாதிவாரிக் கணக்கெடுப்பு… தடை போடும் பாஜக – சமூக நீதி மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்!