காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். Mamata has said that there is no alliance with the Congress
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (பிப்ரவரி 10) கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி,
“அடுத்த ஆண்டு எதிர்கொள்ளவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்ந்து டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் வளைந்து கொடுத்திருக்க வேண்டும்.
காங்கிரஸால் டெல்லி மற்றும் ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மியின் பயணத்தை காங்கிரஸ் கெடுத்துவிட்டது.
அது மேற்கு வங்கத்தில் நடக்காது. நமது வாக்குகளை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை. தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் ” என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியும், காங்கிரஸும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாததே ஹரியானா, டெல்லி தோல்விக்கு காரணம் என்று சுட்டிக்காட்டிய மம்தா பானர்ஜி, “தேர்தலில் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க, ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே, புரிதல் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியுற்றதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அந்த கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த கருத்தை முன்வைத்த விசிக தலைவர் திருமாவளவன் விரைவில் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா இந்தியா கூட்டணியை சேர்ந்த மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒருவரை ஒருவர் நம்பி செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று மம்தா அறிவித்திருப்பதன் மூலம், இந்த கூட்டணி தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆவதாக பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். Mamata has said that there is no alliance with the Congress