2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வரை தலைவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்தார்.
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்ட போது, திரௌபதி முர்மு தான் பா.ஜ.க.வின் வேட்பாளர் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் முழு மனதாக ஆதரவளித்திருப்பேன் என கூறியிருந்தார் மம்தா பானர்ஜி.
இது எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னர் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலையே புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதனால் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்துவிட்டதாக பேச்சு எழுந்தது.
குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பிறகு அவர் தேசிய அரசியலில் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் எதிர்க்கட்சி கூட்டணி குறித்து பேசி பா.ஜ.க.வுக்கு பயம்காட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் மம்தா பானர்ஜி.
தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அரசியல் ஒரு போர்க்களம் என பேசிய மம்தா, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உத்தரப் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் தானும் ஒன்றாக நிற்பதாக அறிவித்துள்ளார்.
300 தொகுதிகள் வரை வெற்றி பெற்றதை நினைத்து பா.ஜ.க. பெருமைப்பட்டுக் கொள்வதாக பேசிய மம்தா பானர்ஜி, 1989-ல் தேர்தலில் தோற்பதற்கு முன்பு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு 400 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததை மறந்துவிட வேண்டாம் என பா.ஜ.க.வுக்கு நினைவூட்டி உள்ளார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என பா.ஜ.க. அரசு விடும் ரெய்டுகளுக்கெல்லாம் மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த பேச்சு எதிர்க்கட்சிகளின் கூட்டணி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஸ்டாலின், நிதிஷ் குமார், கே.சி.ஆர். என பலரும் எதிர்க்கட்சி கூட்டணிக்காக உழைத்துவரும் நிலையில் தற்போது மம்தா பானர்ஜியும் பழைய மோடுக்கு திரும்பியுள்ளது பா.ஜ.க.வுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.
அப்துல் ராஃபிக்
“ஆர்எஸ்எஸ்-சில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல” – மம்தா பானர்ஜி