“ஆர்எஸ்எஸ்-சில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் அல்ல” – மம்தா பானர்ஜி

Published On:

| By christopher

ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (ஆகஸ்ட் 31) நடந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கூறினார்.

இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று நபன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றி பேசினார். அப்போது, “ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் என்று நான் நினைக்கவில்லை.

இப்போது கூட பாஜக செய்யும் அரசியலை ஆதரிக்காத நல்லவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் மௌனத்தைக் கலைப்பார்கள்” என்று கூறினார். இதனையடுத்து சமூகவலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மம்தா அப்பவே அப்படி!

ஐதராபாத்தை மையமாக கொண்ட ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று (செப்டம்பர் 1) கூறுகையில், “கடந்த 2003 ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ் ‘தேசபக்தர்கள்’ என்று மம்தா பானர்ஜி அழைத்தார்.

அதற்கு பதிலாக அந்த அமைப்பினர் அவரை ’துர்கா’ என்று அழைத்தனர். இந்நிலையில் அவர் தற்போது இவ்வாறு கூறுவது பெரிய ஆச்சரியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சிபிஐ(எம்) அரசை கவிழ்க்க ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவு!

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , ”மம்தா பானர்ஜி ஆர்எஸ்எஸ்ஸைப் புகழ்வது இது முதல் முறையல்ல. மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், பாஜக தலைமையிலான என்டிஏவில் பானர்ஜி தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த சிபிஐ(எம்) தலைமையிலான அரசை கவிழ்க்க மம்தா ஆர்எஸ்எஸ் ஆதரவைக் கோரினார். தேர்தலுக்காக பல்வேறு காலங்களில் இந்துக்கள், முஸ்லிம்களை மாறி மாறி கேலி செய்து வருகிறார். தற்போது மம்தா பானர்ஜி மீண்டும் அம்பலப்பட்டுள்ளார்” என்று கூறினார்.

மம்தா பானர்ஜி ஆர்எஸ்எஸ்ஸின் ’தயாரிப்பு’!

சிபிஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி கூறுகையில், ”மம்தா பானர்ஜி ஆர்எஸ்எஸ்ஸின் “தயாரிப்பு” என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை அவரது வார்த்தைகளே உறுதிப்படுத்தி உள்ளன. தேசிய அரசியலில் நடைபெற்று வரும் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கைக்குரியது அல்ல என்பது மீண்டும் தெளிவாகிறது.” என்று கூறினார்.

வன்முறையை கைவிடுங்கள் மம்தா!

இதற்கிடையே மம்தா பாராட்டிய ஆர் எஸ் எஸ் அமைப்பே அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் ஜிஷ்ணு பாசு கூறுகையில், ”மம்தாவின் புகழ்ச்சியை ஆர்எஸ்எஸ் புறக்கணிக்கிறது. தேர்தலுக்கு பின்னர் நடந்த வன்முறையில் அமைப்பில் உள்ள 60 பேர் கொல்லப்பட்டனர். ஆர்எஸ்எஸ் மீதான அரசியல் வன்முறையை அவர் நிறுத்தவேண்டும். தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி எதிராக வாக்களித்தவர்களுக்கும் அவர் முதல்வர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முதல்வர் பானர்ஜியின் சான்றிதழ் தேவையில்லை.!

பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ”ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக குறித்து யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற முதல்வர் பானர்ஜியின் சான்றிதழ் தேவையில்லை. அதை மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் அவருக்குப் பதில் சொல்ல தேவையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுகதா ராய், “ ஒவ்வொரு அமைப்பிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் உள்ளனர் என்று மம்தா பானர்ஜி கூற முற்பட்டுள்ளார். கட்சியின் மதச்சார்பற்ற தகுதியை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.” என்று கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிரதமர் கல்வி உதவித்தொகை: இந்தியில் வினாத்தாள் – கிளம்பிய எதிர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share