மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!

அரசியல்

மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியிருக்கும் கருத்தால், திரிணாமுல் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கிலும், கால்நடை கடத்தல் வழக்கில் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரதாவும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மம்தா பானர்ஜி, பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ”2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவோம்.

mamata banerjee may be arrested soon claims sukanta majumdar

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உடன் இணைந்து பணியாற்றுவோம்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்வது வாயிலாக, தொண்டர்களை மிரட்டலாம் என பாஜக நினைக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேற்குவங்க பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று (செப்டம்பர் 27) ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.

அப்போது மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்கள் உள்பட ஒரு சில முக்கிய தலைவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு சிறைக்கு வெளியே இருப்பார்கள்.

ஏனென்றால் மீதம் உள்ளவர்கள் சிறையில் இருப்பார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் ஜெயிலுக்கு சென்றுவிட்டால் அப்புறம் யார் ஆட்சியை நடத்துவார்கள்?

டிசம்பருக்குள் இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் இருக்கிறோம். சிறைக்குச் செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை.

ஒருவேளை முதல்வரும் ஜெயிலுக்கு செல்லும் நிலை வரலாம்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 எம்.எல்.ஏக்கள், பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுவுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

பின்னர் மிதுன் சக்கரவர்த்தி பேசுகையில், ”திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 38 எம்.எல்.ஏக்களில் 21 பேர் என்னுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். இதை நான் முன்னரும் கூறினேன்.

இப்போது திரும்பவும் கூறியுள்ளேன். இந்த கருத்தில் நான் உறுதியாய் நிற்கிறேன். அதற்கான நேரம் வரும்வரை அவர்களைக் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதே கருத்தைத்தான் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடமும் தெரிவித்திருந்தார்.

சுகந்தா மஜூம்தார் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரின் பேச்சால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தொற்றியிருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

‘பொறுத்திருந்து பாருங்கள்’ : பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின் பன்னீர்

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0