Mamata Banerjee an attack on INDIA alliance
சேலத்தில் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், “வடக்கிலும் விடியல் வரும், இந்தியா கூட்டணி வெல்லும், ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று பேசியிருந்தார்.
ஆனால் மறுநாள் ஜனவரி 22 ஆம் தேதி மேற்கு வங்காள முதல்வரும், திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணி கட்சிகளை கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி, திறந்து வைத்த நேற்று, மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மத நல்லிணக்க யாத்திரையை நடத்தினார். இதில் பேசிய மம்தா மக்களவைத் தேர்தலை ஒட்டி மதத்தை அரசியலாக்குவதாக பாஜகவை கடுமையாக சாடினார். அதுமட்டுமல்ல… இந்தியா கூட்டணியின் கூட்டங்களை சிபிஐ(எம்) கட்டுப்படுத்துவது கண்டு வருத்தப்படுவதாகவும் கூறினார்.
பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பேரணி முடிவடைந்து நடந்த பொதுக் கூட்டத்தில் மம்தா உரையாற்றும் போது,
“எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரையே நான் தான் பரிந்துரைத்தேன். ஆனால், நான் இந்தியா கூட்டணி கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது சிபிஐ(எம்) அதைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்கிறேன். இதை வருத்தத்துடன் கூறுகிறேன். 34 ஆண்டுகளாக நான் யாரை எதிர்த்துப் போராடி வருகிறேனோ அவர்களுடன் என்னால் எப்படி உடன்பாடு செய்துகொள்ள முடியும்? முடியவே முடியாது.
பாஜகவுடன் சண்டையிடும் சக்தி என்னிடம் உள்ளது, நான் செய்கிறேன். எந்த மாநிலத்தில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அல்லது செல்வாக்காக இருக்கிறார்களோ அந்த பிராந்தியக் கட்சிகள்தான் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன்.
நீங்கள் (காங்கிரஸ்) 300 இடங்களில் போட்டியிடுங்கள், நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்று கூறியிருந்தேன். ஆனால், சீட் பங்கீட்டில் நாங்கள் சொல்வதை சிலர் கேட்க விரும்பவில்லை. நான் ரத்தம் கொடுக்க தயாராக இருக்கிறேன், ஆனால் பாஜகவுக்கு ஒரு இடம் கூட மேற்கு வங்காளத்தில் விடமாட்டேன்” என்று கூறியிருக்கிறார் மம்தா.
மேற்கு வங்காளத்தில் காங்கிரசுக்கு பெர்ஹாம்பூர் மற்றும் மால்டா தக்சின் ஆகிய இரண்டு இடங்களை மட்டுமே வழங்க முன் வந்துள்ளார் மம்தா. மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி பெர்ஹாம்பூர் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக இருக்கிறார். அவர் மம்தாவின் இந்த ஆஃபரை நிராகரித்துள்ளார்.
“நாங்கள் 2019 இல் திரிணமூல், பாஜக இரண்டையும் எதிர்த்து தனியாக நின்று ஜெயித்திருக்கிறோம். நாங்கள் வெற்றி பெறுவதற்கு மம்தாவின் அருள் அல்லது பெருந்தன்மை தேவையில்லை” என்று கூறியிருக்கிறார்,
மேற்கு வங்காளத்தில் இருக்கும் மொத்தமுள்ள 42 எம்பி தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தனித்து நின்று 2 தொகுதிகளை வென்றது. பாஜக 18 இடங்களை வென்றது. இடது முன்னணி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மம்தாவின் நேற்றைய வெளிப்படையான பேச்சுகளால் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சிக்கல் நீடிக்கிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!
Mamata Banerjee an attack on INDIA alliance