டெல்லியில் இன்று திறக்கப்பட இருக்கும் நேதாஜி சிலை திறப்பு விழாவிற்கு தமக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 8) திறந்துவைக்க இருக்கிறார்.
இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தனக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், அந்தச் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 8) கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி விழா ஒன்றில் பேசிய மம்தா, “ ‘நேதாஜி சிலையை மாலை 7 மணிக்கு பிரதமர் திறந்துவைப்பார் என்றும், மாலை 6 மணிக்கு நீங்கள் அங்கு இருக்க வேண்டும்’ என்றும் துணைச் செயலாளரிடமிருந்து எனக்கு நேற்று (செப்டம்பர் 7) கடிதம் வந்தது.
நான் என்ன, அவர்களின் கொத்தடிமையா? ஒரு துணைச் செயலாளர் எப்படி முதலமைச்சருக்கு கடிதம் எழுத முடியும்? அதனால்தான் இன்று மதியம் இங்குள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்