பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன்.
பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி எப்படி சமூகத்தில் நடத்தப்படுகிறார் என்பதை விவரிக்கும் இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் நடித்துள்ள வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மேலும் அரசியல் ரீதியாகவும் இந்த படம் தொலைக்காட்சிகளிலும், சமூகவலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஜூலை 1) மதுரையில் உள்ள பிரபல திரையரங்கில் கண்டு ரசித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாமன்னன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளின் உண்மை சம்பவங்களை அடுக்கடுக்காக விவரித்தார்.
அந்த காட்சி படத்தின் முக்கிய புள்ளி
அவர், “மாரி செல்வராஜ் துணிச்சலாக மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். படத்தை தயாரித்து, நடித்து வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன்.
சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கிற பாகுபாட்டினை படத்தின் கருப்பொருளாக எடுத்துள்ளார். சாதி வெறிக்கும் சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை உணர்த்தியுள்ளார். சமூக நீதிப்போராட்டம் எவ்வளவு குருதி சிந்தும் போராட்டமாக இருக்கிறது என்பதை மிக தத்துரூபமாக எடுத்துள்ளார்.
வடிவேலு நடிப்பு மிகவும் அபாரமாக உள்ளது. திரைப்படம் காலத்திற்கு பொருத்தமான ஒன்று.
அரசியலில் எந்த அளவுக்கு சாதியம் தலைவிரித்து ஆடுகிறது, சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக இறுகி கிடக்கிற சாதியப்போக்குகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அவர் தன்னுடைய படத்தில் மிக முக்கியமான காட்சியாக வைத்திருக்கிறார்.
சாதி இந்துக்கள் என்கிற வளையத்துக்குள் எல்லோரும் சிக்கிக் கொள்ளக் கூடாது, ஜனநாயக சக்திகளாக எழுச்சி பெற வேண்டும், சாதி சமூக அடையாளங்களை உதறிவிட்டு மாமன்னனுக்கு வரவேற்பு கொடுக்கக்கூடிய வகையிலே சாதி இந்து சமூகத்திலிருந்து இளைஞர்கள் வெளியே வருகிற காட்சி படத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளி” என்றார்.
காட்சிகளும் – உண்மை சம்பவங்களும்
தொடர்ந்து அவர், “இந்தப் படத்தில் பல்வேறு காட்சிகள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தவற்றின் தொகுப்பாக உள்ளது. அரியலூர் புலப்பாடி கிராமத்தில் உள்ள கிணற்றில் 4 தலித் சிறுவர்கள் குளித்ததால் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கிணற்றில் குளித்த சிறுவர்கள் மீது கல்வீசி கொல்லும் காட்சி நியாபகப்படுத்துகிறது.
அதில் தப்பித்த ஒரு சிறுவன் தான் அதிவீரன். ஆனால் அரியலூரில் நடைபெற்ற உண்மை சம்பவத்தில் 4 சிறுவர்களுமே கொல்லப்பட்டனர் என்பது மறக்கமுடியாத சோகம்.
அதுபோல காசிபுரம் என்பது ராசிபுரத்தையும், அங்கு வெற்றி பெற்ற மாமன்னன் சபாநாயகர் இருக்கையில் அமரும் காட்சி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலையும் நியாபகப்படுத்துகிறது.
ஒற்றை நட்சத்திர சின்னம், தேர்தலில் பின்னடைவு, எல்லோரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பின்னதாக மாமன்னன் வெற்றிபெற்றதாக வந்த காட்சிகள், கடந்த 2019ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட பதற்றத்தை நியாபகப்படுத்தியது.
நட்சத்திர சின்னம், நான் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிட்டதை நியாபகப்படுத்தியது.
இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நிகழ்ந்த சம்பவங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக தான் மாமன்னன் திரைப்படம் அமைந்துள்ளது.” என்றார்.
இம்மானுவேல் சேகரன் கூட
மேலும், ”யார் நிற்பது, யார் அமர்ந்திருப்பது என்கிற அடிப்படையில் நீண்ட காலமாக இந்த சமூகத்தில் நிலவுகிற மிக மோசமான சாதி இறுக்கத்தை தளர்வு செய்கிற ஒரு முக்கிய உரையாடலை இப்படம் நிகழ்த்தியுள்ளது.
இம்மானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்தார் என்பதால் தான் கொல்லப்பட்டார் என்பது ஒரு பதிவு.
இங்கே அமர்வதும், நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன. தனது தந்தை அனைவருக்கும் சமமாக அமரவேண்டும் என்பதற்காக மகன் நடத்துகிற போராட்டத்தை சித்தரிக்கும் சமூகநீதி படமாக மாமன்னன் வெளிவந்துள்ளது.
வெற்றிகரமாக எல்லோரலும் ஏற்கப்பட்டிக்கிறது. ஜனநாயகத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்கள் மாமன்னனை வெற்றிப்படமாகவும் மாற்றியிருக்கிறார்கள். எனவே சமூகநீதி வெல்லும் என்பதையே இப்படம் உணர்த்துகிறது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல்காந்திக்கு மணிப்பூர் பாஜக தலைவர் பாராட்டு!
இப்படி ஒரு பிரியாணி காதலனா! ஸ்விக்கி வெளியிட்ட சூடான தகவல்!