கர்நாடகாவில் இன்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கும் நிலையில் அவர்களுடன் 8 அமைச்சர்கள் முதல்கட்டமாகப் பதவி ஏற்கின்றனர்.
கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இன்று (மே 20) ஆட்சி அமைக்கிறது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இருவரும் இன்று பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி ஏற்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் காங்கிரஸ் அழைப்பின் பேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு பெங்களூரூ சென்றார்.
அவரை பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடக மாநில அரசின் சார்பில் கர்நாடக மின்-ஆளுமை செயலாளர் பொன்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தமிழ்நாடு முதல்வரைத் தவிர, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபருக் அப்துல்லா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில், மம்தா பானர்ஜி தான் கலந்துகொள்ளவில்லை என்றும் எனினும் தனது பிரதிநிதியாக மக்களவை உறுப்பினர் ககோலி கோஷ் தஸ்திதாரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
அழைப்பு விடுத்த விருந்தினர்கள் கர்நாடகாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம் நேற்று நள்ளிரவு வரை அமைச்சர்கள் பதவி தொடர்பாக டெல்லியில் ஆலோசனை நடந்துள்ளது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று 8 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்பார்கள் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜாகிஹோலி, ராமலிங்க ரெட்டி, ஷமீரா அகமது உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
ரூ.2000 வாபஸ்: கேள்வியும் பதிலும்!
விஜய் சேதுபதியின் புதிய பட அப்டேட்!