காங்கிரஸ் தாலியை பறிக்குமா? – மோடியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட கார்கே

Published On:

| By Selvam

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கமளிக்க விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மோடிக்கு இன்று (ஏப்ரல் 25) கடிதம் எழுதியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் வீசுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “இந்துக்களின் சொத்துக்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

மோடியின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மதம் தொடர்பான பேச்சுக்கு பதிலளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் தரப்பில் மோடிக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தசூழலில், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி தவறான தகவல்களை வெளியிட்டு வருவதால், அவரை சந்தித்து தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (ஏப்ரல் 25) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

“கடந்த சில நாட்களாக உங்களது பேச்சுக்கள் எனக்கு ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. முதல் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த பெர்ஃபாமன்ஸிற்கு பிறகு உங்களது கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படி பேச தொடங்குவீர்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

காங்கிரஸ் கட்சி ஏழை மக்கள் மற்றும் அவர்களின் உரிமை குறித்து பேசுகிறது. ஆனால், ஏழைகள் மீது உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நீங்கள் வேலை செய்கிறீர்கள். அவர்களுக்கான வரியை குறைக்கிறீர்கள். அதேநேரத்தில் நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிக வரியை வசூலிக்கிறீர்கள்.

ஏழைகள் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார்கள். கார்ப்பரேட் பெரு முதலாளிகள் ஜிஎஸ்டி பணத்தை திருப்பி கேட்கிறார்கள். அதனால் தான் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை வேண்டுமென்றே இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே ஒப்பீடு செய்கிறீர்கள்.

எங்களது தேர்தல் அறிக்கை ஏழைகளுக்கானது. உங்கள் முன்னாள் கூட்டாளிகளைப் போல, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்காதீர்கள்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சேவை செய்து வருகிறது. ஆனால் உங்கள் ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் சம்பாத்தியத்தையும், செல்வத்தையும் பறித்தீர்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய பாஜக அரசு சட்டப்பூர்வமான கொள்ளையாக பயன்படுத்தியது. பெரு முதலாளிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் ஏழை மக்களிடம் இருந்து பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகளின் கடன் தொகையை நீங்கள் தள்ளுபடி செய்யவில்லை.

நாட்டில் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தபோது அதனை நீங்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நீங்கள் இன்று அவர்களின் தாலியைப் பற்றி பேசுகிறீர்கள்.

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், தலித் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையான போது அவர்களை வரவேற்று மாலை அணிவித்தது உங்கள் அரசு தானே?

பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போது, அவர்களின் மனைவி, குழந்தைகளை நீங்கள் எப்படி பாதுகாத்தீர்கள்? நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்போகும் திட்டத்தை போய் படியுங்கள்.

ஒரு உள்ளடக்கத்தின் கருத்துக்களில் இருந்து சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, வகுப்புவாத பிளவை உருவாக்குவது உங்களுக்கு வழக்கமாகிவிட்டது. இப்படி பேசிப்பேசி உங்கள் நாற்காலியின் கண்ணியத்தை குறைத்திருக்கிறீர்கள்.

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் கொச்சையான வார்த்தைகளை பிரயோகம் செய்து மோடி பேசியிருக்கிறார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மக்களுக்கு தெரியவரும்.

உங்கள் பேச்சுக்களை கேட்டு கைத்தட்டும் உங்கள் சொந்த மக்களிடம் ஏமாந்து விடாதீர்கள். இந்தியாவில் அனைத்து சாதிகளிலும் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விளிம்பு நிலை மக்களுக்கு நீதி வழங்குவதையே காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்படுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரத்னம் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து: விஷால் குற்றச்சாட்டு!

திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share